நாட்டை உலுக்கிய குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு…!

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் அனுஸ்டிக்கப்பட்டது.

குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் நினைவேந்தல் இடபெற்றது.

காலை 8.15 மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி திருப்பலியும், சம நேரத்தில் மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள வீரபத்திர பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மா சாந்தி வேண்டி சிறப்பு பூஜையும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுமத்தின் நெடுந்தீவு பிரதேச தலைவர் வி.ருத்திரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நினைவுத் தூபிக்கான நினைவுச் சுடர் ஏற்றல் மற்றும் மலர் அஞ்சலி செலுத்துதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து பசுந்தீவு ருத்திரனின் ‘குருதியின் குமுறல்கள்’ என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் நெடுந்தீவு பகுதி மதத்தலைவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 36 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews