தொலைபேசியில் பேசிக் கொண்ட ஜோ பைடன் – ஜி ஜின்பிங்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 7 மாதங்களுக்குப் பின்னர் பேசிக் கொண்டனர். இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.

உலகின் மிகப் பெரிய பொருளாதார ஜாம்பவானாக திகழ்கின்றன அமெரிக்கா மற்றும் சீனா. இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே கடந்த 7 மாதங்களாக எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இருநாட்டு அதிபர்களும் பேசியுள்ளனர். இதனை வெள்ளை மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. சீன அரசு ஊடகமான சினுவா செய்தி நிறுவனமும் உறுதிப் படுத்தியுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 90 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சீனா உறவை முன்னே கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையேயான இணக்கமான விஷயங்கள் பற்றியும் பேசப்பட்டது. பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வரும் நிலையில், அவ்விவகாரத்தில் சீனா, அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில் இது குறித்தும் அதிபர்கள் ஆலோசனை செய்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
சீன அரசு ஊடகக் குறிப்பில், இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மை நிறைந்ததாகவும், ஆழமானதாகவும் இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் குறித்தும் இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டுள்ளது. இனி அடிக்கடி ஆலோசனைகளை மேற்கொள்வது என இருநாட்டுத் தலைவர்களும் முடிவு செய்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews