18ம் திகதி உருத்திரபுரீஸ்வரர் காணியை அளவீடு செய்ய தொல்பியல் திணைக்களம் முயற்சி – சிறிதரன் குற்றச்சாட்டு

இன நல்லிணக்கம் பாதிப்பதை நிறுத்துங்கள் என்ற ஜனாதிபதியின் சொல்லை மீறி 18ம் திகதி உருத்திரபுரீஸ்வரர் காணியை அளவீடு செய்ய தொல்பியல் திணைக்களம் முயற்சித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
கிளிநொச்சியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 9ம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் என்னால் ஒரு முக்கியமான விடயம் சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கில் தமழர்களது பூர்வீக நிலங்களில் இந்து சைவ ஆலயங்கள் இடிக்கப்பட்டும், சொருபங்கள் அகற்றப்பட்டும் சில கத்தோலிக்க தேவாலயங்கள் அழிக்கப்படு அந்த இடங்களிலே  புத்த விகாரைகளும், புத்த சிலைகளும் நிறுவப்படுகின்ற மிக முக்கிய விடயத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தேன்.

அன்றைய தினம் கச்சைதீவு உட்பட 66 விடயங்களை ஆவண ரீதியாக பாராளுமன்றத்தின் மேசைக்கு கொண்டு சென்று பாராளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தேன். தமிழர் பிரதேசங்களில் இந்த விடயம் தமிழர்களை பாதிக்கின்றது எனவும், இது மோசமான விடயம் எனவும் அன்றைய தினம் உரையாற்றியிருந்தேன்.
இந்த விடயம் தொடர்பில் பாரதத்தின் தலைவர் மோடிக்கும் ஆவணத்துடனாக கடிதத்தை அனுப்பியும் உள்ளேன். அதேவேளை அமெரிக்கா, இந்தியா, ஜப்பானிய தூதுவர்களிற்கும் எழுத்து மூலமாக கடிதங்களாக அனுப்பியுள்ளோம்.
ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பல தரப்புக்கும் இந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், ஜனாதிபதிக்குமிடையிலான பேச்சுவார்த்தையின்போதும் ஜனாதிபதியிடம் கையளித்து விடயத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றோம்.
நீங்கள் ஏன் இவ்வாறான விடயங்களை கையாளுகின்றீர்கள் எனவும், அரசாங்கம் காசு அனுப்பாமல் எவ்வாறு பிக்குமாரின் காசுகளில் இந்த விடயத்தை கையாள முடியும் உள்ளிட்ட வினாக்களை எம்முன்னாள் தொல்பொருள் திணைக்களத்திடம் ஜனாதிபதி வினவினார்.
இது நாட்டின் நல்லிணக்கத்திற்கும், இன ஒற்றுமைக்கும் ஆபத்தானது எனவும் அதனை உடனடியாக நிறுத்துங்கள் எனவும் 85ம் ஆண்டுக்கு முன்னரான வரைபடத்தை வைத்துதான் முடிவுகள் எட்ட முடியும் என நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க கட்டளையை வழங்கியிருந்தார்.
அவரது உத்தரவு சொல்லின் ஒலி மறைவதற்குள் எதிர்வரும் 18ம் திகதி கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இருக்கின்ற உருத்திரபுரீஸ்வரர் காணியை பௌத்த விகாரை அமைப்பதற்காக அளப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அது தொடர்பாக கரைச்சி பிரதேச செயலாளரின் கடிதம் ஒன்று ஆலய நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தை பார்வையிட்டு நில அளவையும் செய்ய வேண்டும் என்ற செய்தி அதில் சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மற்றுமொரு கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு உடன் கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பி வைத்துள்ளோம் எனவும் அவர் மேலும் விடயங்களை தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews