ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜனநாயகத்தை மதித்து பேணிப்பாதுகாப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாடாளுமன்றில் தோற்கடியுங்கள்- கிளிநொச்சி பிரஜைகள் குழு

ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜனநாயகத்தை மதித்து பேணிப்பாதுகாப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாடாளுமன்றில் தோற்கடியுங்கள் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கிளிநொச்சியில் இன்று பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவ்வமைப்பின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலே கொண்டுவரப்படவிருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடபாக பாராளுமன்றத்திலே சில நாட்களில் சமர்ப்பித்து அங்கிகாரம் பெறுவதற்கான நடவடிக்கையில் நீதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம்.
இந்த சட்டம் தொடர்பாக பல்வேறுபட்ட எதிர்ப்புகள் இருக்கின்றது. அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் இருக்கின்றது. அதேவேளை, குறித்த நட்டத்தை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கமும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமையை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம்.
பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை பெறுவதுதான் இந்த சட்டத்தை தீர்மானக்கும் சக்தியாக இருக்கும். எனவே, சிறுபாண்மையின பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு அப்பால் சென்று, ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு வெளியில் சென்று இந்த கொடூரமானதும், அபாயகரமானதுமான எதிராக வாக்களிக்க வேண்டும் என்பது பொதுவாக பிரஜைகளுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது,
ஏனெனில் குறித்த சட்டம் பாரதூரமான சரத்துக்களை கொண்டிருக்கின்றது. அதன் ஊடாக அரச பயங்கரவாதம் தலை தூக்குவதற்கான சூழல்கள் இருக்கின்றது. ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் மறுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய காணப்படுகின்றது,
ஒரு சமூகம் சார்ந்தும், இனக்குழுமம் சார்ந்தும் சிந்திக்காது, ஒட்டுமொத்த நாட்டின் பிரையைகளின் உரிமைகள், நலன்கள் எனும் விதமாக உற்றுநோக்கி, இந்த சட்டத்தை தோற்கடிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பங்கும், அர்ப்பணிப்பும் தேவை.
எந்த மொழி, கட்சி, இனமாக இருந்தாலும் ஒட்டுமொத்த இலங்கையினுடைய ஜனநாயகத்திற்கு ஆப்பு வைக்கின்றதும், ஜனநாயக கொள்கையை அடிப்படையில் கிள்ளியெடுக்கும் சட்டமாக பயங்கரவாத சட்டம் இருக்கின்றமையால், அதனை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்க வேண்டும்.
குறிப்பாக இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்காக எடுக்கின்றபொழுது, பல உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு சமூகமளிப்பதில்லை. இது தோல்வியுற்ற அரசியல் நாடாகவும், தோல்வியுற்ற கலாச்சாரத்தை கொண்ட நாடாகவும் இருக்கின்றதா என்ற ஐயப்பாடு நிலவுகின்றது.
ஏனெனில் திராணியற்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். தாங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்தால் அரசாங்கத்தினுடைய வரப்பிரசாதங்களை அல்லது திரைமறைவில் நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை பெறமுடியாத நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுவார்கள் என்ற சந்தேகக்கண்ணோடு தங்களை வெளிப்படுத்துவதில் மதில்மேல் பூனை போன்று இருந்துவிட்டு பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காது இருக்கின்றார்கள்.
ஆதரித்து வாக்களிப்பதும், பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காது இருப்பதும் அச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவே பொதுமக்கள் நாங்கள் கருதுகின்றோம். எனவேஈ, பயங்கரவாத எதிர்பபு சட்டம் என்பது எமது நாட்டு மக்களிற்கு தேவையற்ற ஒன்று.
நாட்டு மக்கள் அவ்வாறான ஒரு சட்டத்தை தற்பொழுது எதிர்பார்க்கவில்லை. இப்போதைய அரசாஙகம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை, பல்வேறுபட்ட விதங்களிலே தூண்டித் தூண்டி விடுகின்றார்கள். மக்களின் புலன்களை பல்வேறுவிதமாக திசை மாற்றப்பார்க்கின்றார்கள்.
உதாரணமாக சீனாவிற்கு காணி கொடுக்கின்ற விடயத்தை பார்க்கலாம். இவ்வாறானவற்றை பார்க்கின்றபோது, அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரச்சினைகளையும் கையாள்வதற்கான யுக்தியாக, பொறிமுறையாக பார்க்கின்றோம்.
இந்த சட்டம் ஆரம்பத்திலேயே தோற்கடிக்கப்பட வேண்டும். இந்த சட்டம் வென்றால் அல்லது பாராளுமன்றத்தில் நடைமறைப்படுத்துவதற்கான சட்டவாக்க செயலகத்தினால் அங்கிகரிக்கப்பட்டால், சர்வதேச ரீதியாகவு்ம, மனித உரிமைகள் அமைப்புக்கள் ரீதியாகவும், இலங்கைக்கு ஏற்படும் பாரிய பின்னடைவாக இருக்கும்.
இலங்கைக்கான கடனை பெறுவதற்கான கூட்டு நாடுகளின் சம்மதங்கள் பெறவேண்டிய சூழல் தற்பொழுது இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை பெறுவதற்கான சூழல்கள் இருக்கின்றது. ஆகவே, இந்த சட்டம் அங்கிகரிக்கப்படுமானால், ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, இலங்கையில் உள்ள பிரஜைகள் என்ற ரீதியில், அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் என்ற ரீதியில் ஒட்டுமொத்தமாக இதற்கு எதிரான செயற்பாடுகள் எம்மால் முன்னெடுக்கப்பட வேண்டும்.
225 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள். அதிலும், ஆளும் கட்சிக்கு சார்பானவர்களும் இச்சட்டத்தை தோற்கடிப்பதற்கு மனப்பூர்வமான, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக, மனித உரிமைகளை மதிக்கின்ற பேணிப் பாதுகாக்கின்ற நபர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
குறித்த சட்டத்தை தோற்கடிப்பதற்கான உதவியை பிரஜைகள் என்ற ரீதியில் அவர்களிடம் எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews