மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்கக் கோரி போராட்டம்!

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் காலை இரண்டு மணி நேரம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க கோரி, காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை போராட்டம் இடம்பெற்றது.
தமது சாதாரண கடமையை விட தற்போது அதிக நேரம் கடமையாற்றுவதாகவும், குறிப்பாக அன்ரிஜன், பீ.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை பராமரித்தல் உள்ளிட்ட மேலதிக கடமைகளை மேற்கொண்டாலும், இதுவரை தமக்கான மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.
தமது மேலதிக நேர கொடுப்பனவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிய மகஜர் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் வகையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளித்தனர்.
இதன் போது மகஜரை பெற்றுக் கொண்ட மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேகைள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,
குறித்த மகஜரை வட மாகாண ஆளுநருக்கு உடனடியாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews