கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் தேடுநர்கள் …! சிறிமோகன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் தேடுநர்கள் உள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தொழிற்சந்தை நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் புள்ளி விபரத்திற்கு அமைவாக 2400க்கு மேற்பட்ட தொழில் தேடுனர்கள் இருக்கின்றார்கள். ஒரு லட்சத்து 46 ஆயிரம் சனத்தொகையில் இது சிறிய தொகையாக இருந்தாலும், எம்மிடம் பதிவு செய்யப்பட்ட தொகையாகவே அது காணப்படுகின்றது.
நாட்டமின்மை, விழிப்புணர்வின்மை காரணமாக இத்தொகை குறைவாக காணப்படலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரை, குறித்த தொகை 10 ஆயிரத்தை தாண்டியதாகவே இருக்கும். அவர்களில் 200 பேருக்கு மேற்பட்டவர்களிற்கு விழிப்புணர்வு அல்லது திருப்புமுனையாக அமையும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.
இந்த நாடு பொருளாதார சுமையிலிருந்து மீள்வதற்கு  எங்களை நாங்களே சுயமாக நிறுத்திக்கொள்ளவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பையும், உள்ளுரிலேயே எம்மை நிறுத்திக்கொள்ளக்கூடிய நிலைப்பாட்டுக்கும் நாங்கள் மாற வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் உள்ளோம்.
அரச வேலைவாய்ப்பு என்று சிந்திக்கின்ற மனநிலை மாறி, ஏனைய திணைக்களங்களுடன் இணைந்து நாங்கள் செல்லவேண்டிய தேவை இருக்கின்றது. இதைவிட  எமது படிப்பிற்கும் வேலைவாய்ப்புக்கும் தொடர்பில்லாத நிலையும் இங்கு இருக்கின்றது.  அதை நிவர்த்தி செய்யும் வகையில் எமது கற்கைநெறிகள் அமைந்திருக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமையம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews