இளைஞர்களின் தேவையற்ற செயற்பாடுகளால் சமூகம் சிதைவடைகிறது – வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர்

இன்றைக்கு பல கிராமங்கள் தங்களது மேம்பாட்டில் சிதைந்து கொண்டு இருக்கின்றது. இளைஞர்கள் தேவையற்ற சமூக விரோத செயற்பாடுகளிலே ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என வலிகாமம் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வள்ளியம்மை வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதை, மதுவுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களிலே ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இதன்மூலம் தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

சில சமூக அமைப்புக்கள் கல்வியை புறக்கணித்து, தங்களது பொருளாதாரத்தையே இழந்து தவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த கட்டமைப்புகளில் இருந்து விடுபட வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கின்றது.

அனைவருக்கும் எமது குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம். இதற்கான அடிப்படைகளை நாங்கள் சரியாக நிர்வகித்துக் கொள்கின்றோமா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துக் கொள்ள வேண்டும்.

சமூகங்களில் உள்ள தலைவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதற்கான பிரதான காரணம் ஒழுக்கமின்மை மற்றும் பாடசாலைக்கு ஒழுங்கின்மை ஆகும்.

கூட்டாக மாறி வாழ்ந்த தன்மை எல்லாம் மாறி குடும்பங்கள் தற்போது தனித்தனியாக பிரித்து ஒவ்வொருவருக்குள்ளேயும் போட்டி, பொறாமை போன்றன ஏற்பட்டு எமது சமூகம் எல்லாவற்றையும் இழந்துள்ளது. இனி இழப்பதற்கு உயிர் ஒன்றை தவிர வேறு எதுவுமல்லை.

அனைத்து மாணவர்களும் கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும். எங்களுடைய வீடு சந்தோசத்தை அனுபவிக்கின்ற ஒரு வீடாக அமைய வேண்டுமானால் எமது வீடு ஒரு கற்ற வீடாக இருக்க வேண்டும். பெற்றோர் தாங்கள் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். இதனை அனைவரும் உங்களது மனங்களில் நிரந்தரமாக பதித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews