இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்து

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமானது.

இம்முறை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பில் விசேட விவாதங்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் பேரவையில் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆணையாளர் வொல்கர் டர்க் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன்சுமை என்பன சமூக, பொருளாதார உரிமைகளை அனுபவிப்பதற்கான நாட்டு மக்களின் இயலுமையில் தீவிர மட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதேவேளை இந்த நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதை இலக்காகக் கொண்ட கொள்கைகளில் சமத்துவமின்மை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டும்.

இதேபோன்று சமூகப் பாதுகாப்பு மற்றும் ஏனைய பொருளாதாரக் கூறுகளையும் மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

மேலும், ஆட்சி நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மோசடிகள், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அந்தக் கொள்கைகள் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகள், கண்காணிப்புக்கள் என்பன முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

அத்தோடு ‘நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் செயல்திறன்மிக்க நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு எமது அலுவலகம் தயாராக உள்ளது என வொல்கர் டர்க் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews