இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாண எம்.பிக்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ்

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறித்த செயற்பாடு என்னுடைய முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறைக்கு எதிராக, கடற்றொழிலாளர்களின் நலனில் அக்கறையுள்ள சிலரினால் நேற்று (05) கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சி.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன் ஆகிய வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு எந்தவகையிலும் அனுமதிப்பதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிடப்பட்டவாறு தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது வளங்களையும் எமது மக்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கின்ற இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத தொழில் முறைகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக இறுக்கமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றேன்.
அதனை கட்டுப்படுத்துவதற்காக இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், கச்சதீவு சந்திப்புக்கள் போன்று நட்பு ரீதியாகவும் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழலில் வடக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை நம்பிக்கையளிக்கும் செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.
ஏற்கனவே, கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை எனப்படும் கடலட்டை வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு மற்றும் பண்ணை முறையிலான கடலுணவு வளர்ப்பு முயற்சிகளுக்கு கடற்றொழிலாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற நிலையில், இன்றைய ஒன்றிணைந்த சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்திலும் இவ்வாறான ஒன்றிணைவுகள் தொடர வேண்டும்.
எமது மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் எமது மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் நலன்களுக்கு அப்பால் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” என்று தெரிவித்துள்ளார் – என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews