தேசிய மக்கள் சக்தியின் பேரணி சட்டவிரோதமானது! பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்ட பேரணி சட்டவிரோதமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நேற்று முன்தினம் (26.02.2023) கொழும்பில் பேரணியொன்றை நடத்தியது.

அதனைக் கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் 28 பேர் காயமடைந்திருந்ததுடன், ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பேரணி குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், தேசிய மக்கள் சக்தியின் பேரணி சட்டவிரோதமானது என கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பேரணிகளை நடத்துவதற்கான அனுமதியில்லை.

தேசிய மக்கள் சக்தியின் பேரணியை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்ட போதும், அவர்களின் பொதுக் கூட்டத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தவில்லை.

அதற்கு முன்னரும் ஹைட்பார்க் மைதானத்தில் தேசிய மக்கள் சக்தி மேற்கொண்ட பேரணிக்கும் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

எனினும் நேற்று முன்தினம் அவர்கள் சட்டவிரோதமான முறையில் பேரணி மேற்கொண்டதன் காரணமாகவே அதனை கலைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews