முறையான பின்பற்றலுடன் காற்றாலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் -எஸ்.ஜீவநாயகம்

முறையான பின்பற்றலுடன் காற்றாலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரகைள் குழுவின் செயலாளர் எஸ்.ஜீவநாயகம் தெரிவித்துள்ளார்.

பூநகரி மற்றும் மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஃ அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் பல்வேறு ஊடகங்களிலே இலங்கை முதலீட்டு சபையினால் இந்தியாவின் அதானி தனியார் நிறுவனத்திற்கு இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள் இரண்டை அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் கைச்சார்த்திடப்பட்டுள்ளது.
குறிப்பாக 442 அமெரிக்க டொலர் பெறுமதியிலான திட்டத்திற்கு இரு தரப்பினரும் ஒப்பந்தமிட்டுள்ளனர். இதில் முக்கியமான பேசு பொருள் என்னவெனில்,
நாடு மிக பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதனைவிட அந்தந்த மாவட்டங்களில் அவ்வந்த பிரதேச மக்களுடன் இந்த செயற்திட்டம் தொடர்பாக வெளிப்படையான உரையாடல்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.
குறிப்பாக இதனால் ஏற்படப்புாகின்ற நீணடகால சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புக்கள் மற்றும் விளைவுகள் சார்ந்த ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. குறித்த விடயம் தொடர்பில் அப்பிரதேசத்தின் அதிகாரப்பரப்பில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுடன் பேசப்படவில்லை.
நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினை இருக்கின்றது. இதை பிரகைள் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்கின்றோம். அதேநேரம் அயல்நாடாகிய பங்களாதேசில் அண்மையில் ரான்ஸ்பெரன்சி இன்ரநசனல் என்ற அமைப்பு பங்களாதேசில் அதானி செய்துகொண்ட ஒப்பந்தங்களை நிறுத்துமாறு அங்கத்தைய அரசுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு அந்த நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். இந்த அரசாங்கம் இரவோடிரவாக இந்த ஒப்பந்தத்தை செய்து, வெளிநாட்டு முதலீடுகளையும், நிதிகளையும் உள்ளெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கின்றது.
நீண்டகாலத்தில் ஏற்படக்கூடிய அபிவிருத்தி விளைவுகள், நிலையான அபிவிருத்திக்கு இத்திட்டங்கள் எவ்வாறு கை கொடுக்கம் என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை.
எனவே இந்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டும். அதிலே  வெளிப்படைத் தன்மை வேண்டும். அது எமது பாமர மக்களுடனும், நிர்வாக மையங்களுடனும் கலந்துரையாடப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.
எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் அவசரமாக கவனம் செலுத்தாது, முறையான படிமுறைகளையும் அணுகுமுறைகளையும் பின்பற்றி மக்களோடு ஒத்திசைவாக இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாங்கள் கோரி நிற்கின்றோம்.

Recommended For You

About the Author: Editor Elukainews