“டயாஸ்பொறா இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்” ?– ஆய்வாளர் நிலாந்தன்

தேசம் என்பது அரசறிவியல் அகராதிகளின்படி ஒரு பெரிய மக்கள் திரள்.ஒரு மக்கள் கூட்டத்தை பெருந்திரளாக கூட்டிக் கட்டுவதைத்தான் தேசிய அரசியல் என்று அழைக்கிறோம்.ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்கள் வருமாறு… இனம்,மொழி,.நிலம்(அதாவது பாரம்பரியத் தாயகம்),பொதுப் பண்பாடு,பொதுப் பொருளாதாரம்…இவை ஐந்துந்தான் ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனைகின்றன.ஈழத்தமிழர்களைப்  பொறுத்தவரை ஒடுக்குமுறையும் அவர்களை ஒரு தேசமாகத்  தொடர்ந்தும் திரட்டுகிறது.

இவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் பிரதான அம்சங்களைப் பலப்படுத்தும் எந்த ஒரு கலைச்சொற்பாடும் தேசியத்தன்மை மிக்கதுதான். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்து “தூவானம்” திரைப்படத்தை பார்க்க வேண்டும்.மருத்துவ நிபுணர் சிவன்சுதனின் தயாரிப்பில்,நாடகப் புலமையாளர் கலாநிதி ரதிதரன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.இசைவாணர் கண்ணரும் அவருடைய இரண்டு பிள்ளைகளும் இசையமைத்துள்ளார்கள்.

ஈழத் திரைப்படத் துறையில் மருத்துவர்கள் இறங்குவது இதுதான் முதல் தடவை அல்ல.ஏற்கனவே வரதராஜன்,ஜெயமோகன் என்ற இரண்டு மருத்துவர்கள் படங்களைத் தயாரித்திருக்கிறார்கள்.வரதராஜன் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் யுத்தகளத்தில் நின்றவர்.அவர் தயாரித்த படம் “பொய்யா விளக்கு”. ஜெயமோகன் புலம்பெயர்ந்து வாழ்கிறார்.அவர் தயாரித்த படம் “பொய்மான்”. இப்பொழுது சிவன்சுதன் தூவானம் படத்தோடு அரங்கில் இறங்கியிருக்கிறார்

போர்க்காலத்தில் புலம்பெயர்ந்து போன ஒருவர் தன் பிள்ளைகளோடு ஊருக்குத் திரும்பி வருகிறார்.தாயகத்தைப் பிரிந்த பிரிவாக்கம்,குற்றவுணர்ச்சி என்பவற்றின் கலப்பாக அவர் காணப்படுகிறார்.தாயகத்தை அவர் எப்படிப்  பார்க்கிறார்;தாயகத்தில் உள்ள அவருடைய நண்பர்கள் எவ்வாறு தமது வாழ்க்கையை வியாக்கியானப்படுத்துகிறார்கள் போன்ற எல்லாவற்றையும் திரைப்படம் கூறமுன்வருகிறது.

படம் ஒரு பாரம்பரியக் கூத்துடன் தொடங்குகின்றது.அக்கூத்தில் வருவது அபிமன்யு வதம்.அது ஒரு குறியீடு.சுற்றிவளைக்கப்பட்ட இளம் அபிமன்யு எப்படிக் கொல்லப்படுகிறான் என்பதனை அது சித்தரிக்கின்றது. அங்கிருந்து தொடங்கி ஆயுத மோதல்கள் முடிந்த பின்னரும்,அதாவது மழைவிட்ட பின்னரும் தூவானம் தொடர்ந்துமிருக்கிறது என்பதைத் திரைப்படம் சித்தரிக்கின்றது. திரைப்படம் வெளிப்படையாக அரசியலைப் பேசவில்லை. பாத்திரங்களும் அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டவை அல்ல.ஆனால் தொகுத்துப்  பார்க்கும் பொழுது அங்கே அரசியல் உண்டு. அது தேசியப் பண்புமிக்க ஒரு எழுத்துரு.அது தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் அம்சங்களைத் தமிழ்மக்கள் பலப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு திரைப்பிரதி.

திரைப்படத்தின் மொழி இயல்பாக பிரதேச வழக்குகளைப் பிரதிபலிக்கின்றது. எனினும் மையப் பாத்திரம் உட்பட சில பாத்திரங்கள் மோடிப்படுத்தப்பட்ட தொனியில் உரையாடுவது இடைஞ்சலாக இருக்கிறது. தமிழ் மரபுரிமைச் சொத்துக்களான வாழிடம், வழிபாடு, உணவு,விளையாட்டு, பழக்கவழக்கங்கள் முதலான பெரும்பாலான அம்சங்களின் மீது எழுத்துரு கவனம் செலுத்துகின்றது.

தமிழ் மக்கள் தமது மரபுரிமை சொத்துக்களை,உள்ளூர் உற்பத்தியை-பொதுப் பொருளாதாரத்தை- வளர்த்தெடுக்க வேண்டும் என்ற செய்தி அதில் உண்டு. புலம்பெயர்ந்த தமிழ் நோக்கு நிலையிலிருந்து தாயகத்தைப் பார்ப்பது, தாயக நோக்கு நிலையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைப் பார்ப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் உரையாடலின் போக்கில் வருகின்றன.

திரைக்கதை ஒரு கிளைமாக்ஸ் காட்சியை நோக்கிக் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.மையப்பாத்திரம் யுத்த காலத்தில் கடல் வழியாக நாட்டை விட்டு புலம்பெயர்கின்றார்.புலப்பெயர்வுக்கு முன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலங்களில் அவருக்கு நெருக்கமான நண்பன் ஒருவன் பாடசாலை பரிசளிப்பு விழாவில் தனக்கு கிடைத்த ஒரு பொருளை இவருக்கு பரிசாக வழங்குகிறான்.நாட்டை விட்டு புலம்பெயரும் பொழுது இவர் அந்தப்  பரிசுப்  பொருளை பத்திரமாக வைத்து விட்டுச் செல்கிறார். புலம்பெயர்ந்த நாட்டில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டபின் பிள்ளைகளோடு நாடு திரும்பி வருகிறார். தன்னுடைய பள்ளிக்கூட நண்பனை சந்திக்கும் பொழுது அவன் தனக்குப் பரிசாகத் தந்த அப்பொருளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அவருடைய நண்பன் போரில் காயப்பட்டு இழப்புக்களோடு காணப்படுகிறார்.எனினும் உள்நாட்டு உற்பத்திகளின் மூலம் பொருளாதார ரீதியாகப் பலமான நிலையில் காணப்படுகிறார்.புலம்பெயர்ந்து சென்ற தன் நண்பனுக்கு புத்திமதிகள் கூறத்தக்க  முன்னுதாரணம்மிக்க ஒரு தொழில் முனைவோராக அவர் வளர்ந்து நிற்கிறார்.நண்பர்களுக்கிடையிலான உரையாடல், தாயகத்துக்கும்  புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துக்கும் இடையிலான உரையாடலாக வளர்ந்து செல்கிறது. ஆயுத மோதல்களுக்குப் பின்னரான தமிழ் வாழ்வை குறிப்பாக தாயகம்,புலம்பெயர்ந்த சமூகம்  ஆகிய இரண்டு பரப்புக்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது.தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச்  சமூகத்துக்கும் இடையிலான இடையூடாட்டங்கள்,எதிர்பார்ப்புக்கள்,ஏமாற்றங்கள்,முற்கற்பிதங்கள்..போன்றவற்றைப்பற்றி அது பேசுகிறது.புலம்பெயர்ந்த தமிழ் நோக்கு நிலையில் இருந்து “தூவானத்துக்கு” அதிக வரவேற்பு கிடைக்கலாம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த பன்னாட்டுத் திரைப்பட விழாவில் பங்கு பற்றுவதற்காக கனடாவில் இருந்து திரைப்பட இயக்குனர் லெனின் சிவம் வந்திருந்தார். அவர் தூவானத்தை பார்த்துவிட்டு “டயாஸ்பொறா இப்படத்தைத்  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடித் தீர்ப்பார்கள் “ என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு தாயகம் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஆகிய இரு தரப்பு நோக்கு நிலையிலிருந்து ஒரு பரந்ததளத்தில் தமிழ்மக்களை இலட்சியபூர்வமாக, அறிவுபூர்வமாக ஒரு தேசமாகக்  கட்டியெழுப்புவதற்குரிய அடிப்படைகளின் மீது இத்திரைப்படத்தின் பிரதி அதிகம் கவனம் செலுத்தியிருக்கின்றது.

இந்த அறிமுகக்குறிப்பானது அப்பிரதியின் அரசியலைத்தான் குறிப்பாகக்  கவனத்தில் எடுக்கின்றது.திரைப்படத்தின் எழுத்துருவில் காணப்படும் தேசியப் பண்பை சிலாகித்துக் கூறும் அதே சமயம்,அந்த எழுத்துரு எந்தளவு தூரம் கலையாக மேலெழுகிறது என்பதுபற்றி விவாதிப்பது இக்குறிப்பின் நோக்கமல்ல. அது தனியாக ஆராயப்பட வேண்டும்.

Recommended For You

About the Author: Editor Elukainews