யாழ்ப்பாணம் கல்வியங்காடு கடையில் வாள்வெட்டு -பிரதான சந்தேக நபர் சிக்கினார்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்க முரண்பாடு  காரணமாக டென்மார்க்கில் உள்ள ஒருவர் பணம் அனுப்பி இந்த வன்முறையை வழிநடத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கைது மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஜனவரி மாத நடுப்பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கோப்பாய் காவல் நிலைய பெருங்குற்றப் பிரிவு உப காவல் பரிசோதகர் லக்சாந் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நேற்று மூவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஜீவன்பாய் (சஜூவன் ), கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கிருஸ்ணன் மற்றும் கோப்பாயைச் சேர்ந்த 26 வயதுடைய சுதர்சன் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

முன்பகை காரணமாக இந்த அடாவடி மற்றும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் வைத்து 22 வயதுடைய சிந்துஜன் என்ற முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் டென்மார்க்கில் வசிக்கும் விஸ்வா என்பவர் பணம் அனுப்பியே வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் கூறினர்.

பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்கத்துடன் ஏற்பட்டுள்ள முரண்பாடே கூலிக்கு ஆள்வைத்து அச்சுறுத்தும் வகையில் இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்துடன் 7 பேர் தொடர்புடைய நிலையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மூவர் தேடப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews