உறவுகளைத் தேடி போராடி வரும் ஜெனிதாவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கிறோம் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி

உறவுகளைத் தேடி போராடி வரும் ஜெனிதாவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்தார்.

இன்று கிளிநொச்சியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதாவின் வீட்டிற்கு கடந்த 26ம் திகதி அதிகாலை 3 மணியளவில் சென்ற சிலர் கழிவு ஒயில் வீசியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தையும், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவிக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையும் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.

அரச புலனாய்வாளர்கள் இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வதை கண்டிப்பதாக தெரிவித்த அவர், நாங்கள் ஆயுதம் ஏந்தி ஈழம் கோரி போராடவில்லை. எமது பிள்ளைகளை தேடியே போராடுகின்றோம்.

இலங்கை அரசிடம் நீதி கேட்டு போராடினோம். நீதி கிடைக்காமையால் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடுகின்றோம். நிச்சயமாக இலங்கை அரசு தண்டிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews