முல்லைத்தீவு அரச பேருந்து சாலையினரின் வழி அனுமதிப்பத்திரமின்றிய சேவையினால் இரு தரப்புக்கு இடையில் முரண்பாடு – மதியம் வரை கடமைக்கு செல்லாது நியாயம் கேட்ட அரச ஊழியர்கள்

முல்லைத்தீவு அரச பேருந்து சாலையினரின் வழி அனுமதிப்பத்திரமின்றிய சேவையினால் இரு தரப்புக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மதியம் வரை கடமைக்கு செல்லாது நியாயம் கேட்ட அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கான ஊழியர்களை ஏற்றுவதற்கான விசேட சேவை ஒன்று முல்லைத்தீவு அரச பேருந்து சாலையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு சேவை முன்னெடுக்கப்படும் நிலையில், தொடர்ச்சியான முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது.

நேற்று காலை 7.30 மணியளவில் பரந்தன் சந்தியில் குறித்த முரண்பாடு கிளிநொச்சி சாலை பேருந்து சேவையினருக்கும், குறித்த பேருந்து சேவையினருக்கும் இடையில் ஏற்பட்டது.

இந்த நிலையல், இன்று தனியார் பேருந்து சேவையினருக்கும், குறித்த சேவையினருக்குமிடையில் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் முரண்பாட்டை ஏற்படுத்தியமையால், தனியார் பேருந்து சேவையினர் பொலிசாரால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, குறித்த பேருந்து சேவையினரும் முறைப்பாடு பதிவு செய்ய சென்றனர். இந்த நிலையில், குறித்த பேருந்தில் பயணித்த மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கடமைக்கு செல்லாது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

காலை 10.30 மணிவரை விசாரணைகள் இடம்பெற்றதுடன், போக்குவரத்து துறைசார் அதிகாரிகளுடன் இணைத்து பொலிசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், குறித்த பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு எட்டப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரூபன் சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தினார். தமது சேவை முறையாக இடம்பெறும் நிலையில், இந்த புதிய சேவை இடையூறு ஏற்படுத்துவதாகவும், இது நேர அட்டவணையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகவும் குறிப்பிட்டார்,

மேலும், கடமைக்கு செல்லாது நியாயம் கேட்ட அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டதுடன், அனுமதிப் பத்திரம் இன்றி மேற்கொள்ளப்படும் சேவை தொடர்பில் கவலை வெளியிடப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews