பருத்தித்துறை நகர சபையில், ஈபிடிபி ஆதரவுடன்  மீண்டும் கூட்டமைப்பு ஆட்சி! புதிய தவிசாளராக நவரட்ணராஜா தெரிவு;

பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டவர் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக இருந்த யோ.இருதயராஜா கடந்த மாதம் தனது பதவியிலிருந்தஜ  விலகியதைத் தொடர்ந்து உருவான தவிசாளர் வெற்றிடத்துக்கே இன்று தேர்தல் நடைபெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேலுப்பிள்ளை நவரட்ணராஜா போட்டியிட்டார். அவரை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி., சமத்துவக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் என 8 பேர் வாக்களித்தனர்.

அதேவேளை, கூட்டமைப்பின் தவிசாளர் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் 6 வாக்குகளையே பெற்றார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்களும் அவரை ஆதரித்தனர்.

அதன்பிரகாரம் பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நவரட்ணராஜா தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த தேர்தல் உள்ளூராட்சி ஆணையாளர் தலமையில் இடம் பெற்றது.

ஈ.பி.டி.பியின் ஒரு உறுப்பினர் சபைக்கு இன்று சமூகமளிக்கவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews