மின்கட்டணத்தை அதிகரித்தே ஆகவேண்டும் -மின்சார சபை தலைவர் தெரிவிப்பு

அடுத்த வருடம் முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்த போதிலும் தாம் அதற்கு அனுமதி வழங்கவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

அத்துடன் மக்களை அச்சத்திற்குள்ளாக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாகவும் அரசியல்வாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மக்கள் பலியாகக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அடுத்த வருடம் முதல் 24 மணிநேர மின் விநியோகத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், கட்டணத்தை அதிகரித்தே ஆகவேண்டுமெனவும் அவ்வாறு செய்யாவிடில் மின் விநியோகத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் தெரிவித்துள்ளார்.

தற்போது மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த அவர், சபையின் செலவுகளை ஈடுகட்டுவதற்கு மின் கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டார்.

மின்சார சபை குறைந்த விலையில் ஓர் அலகு மின்சாரத்தை வழங்குவதாலும், செலவுகளின் அதிகரிப்புக்கு ஏற்ப 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்காததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் மின்சக்தி அமைச்சும் இணைந்து மின் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி, திட்டமிட்டபடி முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிலக்கரிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews