நிலச்சரிவில் சிக்கி முழுவதுமாக புதைந்தது பயணிகள் பேருந்து – சிறுவர்கள் உட்பட பலர் பலி

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட பயணிகள் பேருந்து முழுவதுமாக புதைந்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு கொலம்பிய மாகாணமான ரிசரால்டாவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரிசரால்டா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இந்த பேருந்தானது 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காலியிலிருந்து காண்டோடோவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இந்த நிலையிலேயே பியூப்லோ ரிக்கோ மற்றும் சாண்டா சிசிலியா நகரங்களுக்கு இடையேயான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பேருந்து மொத்தமாக புதைந்து போயுள்ளது.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் பல மணி நேரம் போராடி 9 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும், திங்கட்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில், புதைந்து போன பேருந்தில் இருந்து மேலும் மூவரை உயிருடன் மீட்டுள்ளனர். சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலான நிலையில் இந்த மூவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் 9 வயதான சிறுமியும் ஒருவர். விபத்தில் சிக்கி இறந்த தனது தாயாரை இறுக்கமாக கட்டியணைத்தபடி குறித்த சிறுமி உயிருக்காக போராடியுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 8 சிறுவர்கள் உட்பட மொத்தம் 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும், சடலங்களை மீட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews