இலங்கையின் திட்டங்கள் குறித்து உலக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், நேற்று நிதியமைச்சில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரின் தலைமையில் கலந்தரையாடல் இடம்பெற்றது.

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட குழுவினருடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன. அரச நிதிக் கண்காணிப்பு மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்தல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்தல், இறையாண்மை நிதித்துறையின் தொடர்பு மற்றும் கட்டமைப்பு ரீதியில் இடர் குறைப்பு, வலுசக்தித் துறையின் செயல்திறனை மேம்படுத்தல் மற்றும் காபன் வெளியேற்றத்தைக் குறைத்தல், கொள்கை நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் மற்றும் பொருளாதார போட்டித்தன்மையை அதிகரித்தல், அரச தொழில் முயற்சிகளை மறுசீரமைத்தல், தனியார் மூலதனத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரோட்பேண்ட் சந்தையில் போட்டித் தன்மையை அதிகரித்தல், சமூக பாதுகாப்பு நிறுவனங்களைப் பலப்படுத்தல் மற்றும் விநியோகக் கட்டமைப்பை இலக்காகக் கொள்ளுதல் ஆகிய 08 துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அது குறித்த ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதிக்கு இவ்விடயங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews