இராமர் கோவிலுக்கு சீதா எலியவிலிருந்து ஒரு கல்….!

(நன்றி நிலாந்தன்)

தமிழ் ஊடகங்களின் கவனம் அதிகம் காசியானந்தனின் இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் பசில் ராஜபக்ச இந்தியாவை நோக்கியும் மேற்கு நாடுகளை நோக்கியும் புதிய காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். அவ்வாறான புதிய காய்நகர்த்தல்களின் பின்னணியில் வெளிவந்த மிலிந்த மொரகொட  தலைமையிலான ஒரு குழு வினரால் தயாரிக்கப்பட்ட ஒன்றிணைந்த மூலோபாயத் திட்டத்தை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

மிலிந்த மொறகொட இலங்கைக்கான இந்தியாவின் தூதுவராக விரைவில் பதவி ஏற்கவிருக்கிறார். அவர் இந்த வாரம் பதவியேற்பார் என்று முன்பு கூறப்பட்டது. எனினும் அது சில கிழமைகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

மிலிந்த யுஎன்பி பாரம்பரியத்தில் வந்தவர். அமெரிக்காவுடன் மட்டுமல்ல சீனாவுடனும் அவருக்கு நல்லுறவு உண்டு. பார்த் பைண்டர் என்று அழைக்கப்படும் கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழாத்தின் பணிப்பாளர் அவர். இச்சிந்தனைக் குழாம் இந்தியாவில் உள்ள விவேகானந்தா அனைத்துலக நிறுவனம் எனப்படும் பாதுகாப்புத் துறைசார் சிந்தனைக் குழாத்துடன் இணைந்து செயல்படுகிறது. அதேசமயம்   இலங்கைக்கான சீனத் தூதரகம் பாத்பைண்டரை தனது மிக உயர்வான பத்துப் பங்காளிகளில் ஒன்றாக அங்கீகரித்திருக்கிறது.

மிலிந்த மொரகொட தொடக்கத்தில்  யு.என்.பியோடு இருந்தவர். அவருடைய மனைவி ஓர் அமெரிக்கப் பெண. நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுவார்ததைகள் முன்னெடுக்கப்பட்ட  காலகட்டத்தில் அமெரிக்காவின் துணை இராஜாங்க அமைச்சராக இருந்த ரிச்சர்ட் ஆர்மிரேஜ்ஜிற்கும் மிலிந்த மொரகொடவிற்கும் இடையே தனிப்பட்ட நெருக்கம் இருந்தது. அதனால் பேச்சுவார்த்தைகளின் போக்கில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒருவராக மிலிந்த காணப்பட்டார்.

ராஜபக்சக்களின் எழுச்சியோடு அவர் கட்சி தாவிவிட்டார். மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அவரை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவுகளைப் பலப்படுத்தும் ஒரு தூதுவராக மஹிந்த பயன்படுத்தினார். அதற்கென்று அவருக்கு விசேஷ அதிகாரங்களும் வழங்கப்பட்டன. அதேபோல இப்போது இந்தியாவை கையாள்வதற்கு கோட்டாபய ராஜபக்ஷ அவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு தூதுவராக டெல்லிக்கு அனுப்புகிறாரா?

அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு தூதுவர் எனப்படுவது என்னவென்றால் அந்தத் தூதுவர் விவகாரங்களை வெளிவிவகார அமைச்சினூடாக அணுக வேண்டியதில்லை. அவர் நேரடியாகவே ஒரு அமைச்சரை போல ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூறலாம். தவிர அவர் ஒரு அமைச்சரை போல தற்துணிபாக முடிவுகளை எடுக்கலாம்.

இந்த நியமனம் கடந்த ஓகஸ்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அண்மையில்தான் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வைரஸ் தொற்று காரணமாக அந்த நியமனம் தாமதமாகியது என்று கூறப்பட்டாலும் கூறப்படாத வேறு காரணங்கள் இருக்கலாம். இப்பொழுதும் கூட மிலிந்த மொரகொட அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு தூதுவராக டெல்லிக்கு போகிறாரா என்பது தெளிவாகவில்லை. அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று முன்பு ஒரு தகவல் வெளிவந்தது அப்படி அவருக்கு அமைச்சரவை அந்தஸ்தை வழங்கினார் அதே அந்தஸ்தை கொழும்பில் இருக்கும் தனது தூதுவருக்கும் வழங்க வேண்டும் என்று இந்தியா கேட்ததாக ஒரு தகவல் உண்டு. உறுதிப்படுத்த முடியவில்லை.

கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்கு இழுபட்டு வந்த நியமனம் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றத்தின் முகமாக பசிலை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்தபின் அவர் புதிய நகர்வுகளை முன்னெடுக்க தொடங்கினார். அப்புதிய இராஜதந்திர நகர்வுகளின் பின்னணியில் புதுடில்லி கையாள்வதற்காக மிலிந்த தயாரித்த திட்டம் அதிகம் பேசப்படுகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மலரச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்படட அந்த திட்டத்தின் தலைப்பு ” இந்தியாவுக்கான இலங்கை ராஜதந்திர தூதரகத்திற்கான ஒன்றிணைக்கப்பட்ட நாட்டு மூலோபாயம்”  என்பதாகும் மத ரீதியிலான பண்பாட்டு ஒருங்கிணைப்பு முதலீடு உல்லாசப் பயணத்துறை பாதுகாப்பு ஒத்துழைப்பு மீனவர் விவகாரம் போன்றவை தொடர்பில் இந்திய அரசோடு நெருங்கி உழைப்பதற்கான இரண்டு ஆண்டுகால வழி வரைபடத்தை அத்திட்டம் கொண்டிருக்கிறது.

குறிப்பாக மத மற்றும் பண்பாட்டு ரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பிணைப்புகளை விருத்தி செய்வது என்ற அடிப்படையில் பௌத்தம் ராமாயணம் முதலியவைகள் தொடர்பிலான தொன்மங்களின் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மத கலாச்சார பிணைப்புகளை பலப்படுத்துவது என்ற ஓர் உள்நோக்கம் அங்கே தெரிகிறது. பௌத்த கிறிஸ்தவ யாத்திரீகர்களை ஊக்குவிக்கும் விடயங்கள் அதிலுண்டு. வேளாங்கன்னி கோயிலுக்குச் செல்லும் யாத்திரீகர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் உண்டு. இன்னும் ஆழமாக பார்த்தால், டில்லியை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவை சந்தோசப்படுத்தும் விதத்தில் அதன் இந்துமதச் சாய்வு நிலைப்பாட்டை இத்திட்டம் நன்கு பயன்படுத்த முயற்சிக்கிறது என்று ஊகிக்கலாம். இலங்கைத்தீவில் இருக்கக்கூடிய இராமாயணத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் புராதன சின்னங்களை அடிப்படையாக வைத்து பண்பாட்டுரீதியில் பிணைப்புகளை பலப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகத் தெரிகிறது.அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமர் ஆலயத்துக்கு இலங்கையின் சீதாஎலியாவிலிருந்து ஒரு கல் கொண்டு செல்லப்படவிருக்கிறது.

எனினும் இந்தத் திட்டவரைபில் முக்கியமான இரண்டு விடயங்கள் தவறவிடப் பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. முதலாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அங்கே எதுவும் கூறப்படவில்லை. இரண்டாவது ஏற்கனவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆனால் முழுமையாக நிறைவேற்றப் படாத விடயங்களான பலாலி விமான நிலையத்தை அடுத்த கட்டத்துக்கு தரம் உயர்த்துவது காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை போன்ற விடயங்களைக் குறித்து எதுவும் கூறப்படவில்லை.

எனவே தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது.இந்தத் திட்டம் எனப்படுவது இந்தியாவை பண்பாட்டு ரீதியாகவும் முதலீட்டு ரீதியாகவும் அரவணைக்கும் நோக்கிலானது. பண்பாட்டு ரீதியாக அரவணைக்கும் பொழுது அதில் மிலிந்த மொறகொட இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் இந்துத்துவச் சாய்வை அதிகம் பயன்படுத்த விழைகிறார். ராமர் கோவில் எனப்படுவது பாரதிய ஜனதாவின் கனவுகளில் ஒன்று. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும்பொழுது அதற்கு இலங்கைத் தீவில் இருந்து ஒரு கல்லை அனுப்புவது என்பது பாரதிய ஜனதாவின் மதச் சார்புடைய ஒரு கனவோடு இலங்கைத் தீவு கூட்டுச் சேர்வதை காட்டுகிறதா?

இரண்டாவது முதலீட்டு ரீதியாக இந்தியாவை நெருங்குவது என்பது. மிலிந்த அண்மையில் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் ராஜபக்ச அரசாங்கம் “பல்வகைமை பண்புமிக்க கூட்டிணைவை பேணுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது சீனா அமெரிக்கா இந்தியா போன்ற பல்வகைமையூடு தனது உறவுகளை அது விருத்திசெய்து வருகிறது என்று அவர் கூற முற்படுகிறார். இன்னும் ஆழமாகச் சென்றால் சீனாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான உறவெனப்படுவது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது; உதவிகள் சம்பந்தப்பட்டது; முதலீடு சம்பந்தப்பட்டது. அது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளைப் புறக்கணிப்பது அல்ல என்பதனை வலியுறுத்துவதே மேற்படி திட்டத்தின் நோக்கம் என்றும் கருதப்படுகிறது.

எது எப்படியானாலும் புதுடில்லிக்கு கொழும்புக்கும் இடையிலான உறவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் இடைவெளியை குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று உறுதியாகச் சொல்லலாம். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மிலிந்தவுக்கு அமைச்சரவை அந்தஸ்து தேவை என்று ராஜபக்சக்கள் கருதுகிறார்கள்.

இதுவிடயத்தில் இங்கு தமிழர்கள் உற்றுக்கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவச்சாய்வை பயன்படுத்தும் வேலைத்திட்டம்தான்.

ஏற்கெனவே இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைத்து புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினரும் தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் ஒரு பகுதியினரும் பாரதிய ஜனதாவை நோக்கி நெருங்கிச் செல்வது தெரிகிறது. குறிப்பாக பாரதிய ஜனதாவின் அனைத்திந்திய மட்டத்திலான பிரமுகரும் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினருமான திருமதி வானதி ஸ்ரீநிவாசனுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் இடையில் உள்ள உறவுகளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அதோடு, 2009க்குப் பின் இந்தியாவையும் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கையும் இணைக்க தேவையான இணைப்புச் செயற்திட்டங்களை சில புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் முன்மொழிந்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அந்த நிகழ்ச்சித் திட்டங்களைத்தான் மிலிந்த மொரகொடவின் இரண்டு ஆண்டு திட்டம் கவனத்தில் கொள்ளவில்லை என்பதனை இங்கு குறிப்பாகச் சுட்டிக்காட்ட வேண்டும். அதேசமயம் பாரதிய ஜனதாவின் ராமர் கோயில் கட்டும் விடயத்தில் கூட்டாளியாக மாறுவதன் மூலம் இலங்கை அரசாங்கம் இந்திய ஆளும் கட்சியை சந்தோசப்படுத்த விழைகிறது.

இந்த விடயத்தை இம்மாதம் முதலாம் திகதி காசியானந்தன் ஒழுங்கு செய்த இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற மாநாட்டின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். காசியானந்தன் இந்திய ஈழ நட்புறவுக் கழகம் என்ற ஒரு அமைப்பை வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் மறவன்புலவு சச்சிதானந்தத்தோடு ஒரு நிகழ்வில் காணப்பட்டார். மறவன்புலவு சச்சிதானந்தம் ஈழத்துச் சிவசேனை என்ற அமைப்பின் ஸ்தாபகராக உள்ளார். காசியானந்தனின் இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இந்துக் கோவில்கள் தாக்கப்படுவது குறித்து அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது.  இது தமிழ் தேசியத்தின் மதப்பல்வகைமையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

காசியானந்தனின் மெய்நிகர் மாநாடும் மிலிந்தவின் திட்டமும் ஒன்று மற்றதின் விளைவுகள் ஏன்று இக்கட்டுரை கூறவரவில்லை.ஆனால் இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு பாரதிய ஜனதாவை நெருங்கிச் செல்ல முயற்சிக்கும் அதே விடயப்பரப்பை மிலிந்த மொரகொட அணி தயாரித்த ஈராண்டுத் திட்டமும் கையிலெடுக்கிறதா என்ற கேள்வி இங்கு முக்கியமானது.

Recommended For You

About the Author: Editor Elukainews