இலங்கை கடற்பரப்பில் 53 நாட்களாக தவம்கிடக்கும் எண்ணெய் கப்பல்

மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு நேற்றுடன் 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் உள்ள மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பலே இவ்வாறு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த வருடத்தில் 53 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், அதே 53 வருட காலப்பகுதியில் மசகு எண்ணெய் கப்பல், எண்ணெய் தரையிறக்கப்படாமல் இருப்பது இதுவே முதல் சந்தர்ப்பம் எனவும் பெற்றோலிய தொழிற்சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்தக் கப்பலுக்கான தாமதக் கட்டணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 79 இலட்சம் டொலர்களுக்கு மேல் அதிகளவில் பணமாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ரஷ்ய நிறுவனமான ‘எக்போ’ நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல், மசகு எண்ணெய் இறக்கப்படாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கப்பலில் 99,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை அண்மித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews