சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தம் வேண்டும்: சஜித் வலியுறுத்து

“வங்குரோத்து நாட்டை மேலும் வங்குரோத்தான நிலைக்குத் தள்ள ஆட்சியாளர்கள் முயல்வது தேசிய அவலமாகும். எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தத்தை அரசு மேற்கொள்ள வேண்டும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திவுலபிட்டிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (22) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,”நாட்டில் பணவீக்கம், வாழ்க்கைச் சுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசு பொருளாதாரத்தையும், தேவைகளையும் சுருங்கச் செய்கின்றது. பொருளாதாரத்தையும் தேவையையும் அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவர அரசு முயல்கின்றது. அது தவறான செயலாகும்.

1988 காலப்பகுதியில் நாட்டில் 2 யுத்தங்கள் இடம்பெற்ற போதும் எவருக்கும் தலைசாய்க்காது தைரியத்துடன் சர்வதேச உறவுகளைச் சரியாகப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். வங்குரோத்து நாட்டை மேலும் வங்குரோத்தான நிலைக்கு தள்ள ஆட்சியாளர்கள் முயல்வது தேசிய அவலமாகும்.

டொலரைக் கொண்டு வரும் சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு வரி விதிக்கப்படுகின்றன. தற்போதைய அரசின் நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்யாது குழப்பம் நிறைந்ததாக இருக்கின்றது” என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin