தன்னைத்தானே அழிக்க முற்படும் முன்னணி அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தியாகி திலீபன் நினைவு கூரல் இறுதி நாள் குழப்பங்கள் ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் பேசு பொருளாகியுள்ளன. வசைபாடல்களுக்கும் குறைவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை நோக்கியே அதிக விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நியாயப்படுத்தல்களில் கவனம் செலுத்துகின்றதே தவிர தன்னுடைய தவறுகளை சுய விமர்சனம் செய்து கொள்ள இன்னமும் தயாராகவில்லை. இது எந்த வகையிலும் முன்னணியின் எதிர்காலத்திற்கு உதவப் போவதில்லை.  முன்னைய ஊர் சண்டித்தனகாரர் போல நடந்து கொள்வது முன்னணியை கீழ் நிலை நோக்கியே இழுத்துச் செல்லும்.
முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,  அரசியல் கைதிகளின் உறவினர்கள்,  மத குருமார்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் பகையாளியாக்கியுள்ளனர்.
நினைவு கூரல் நாட்கள் தொடங்கிய காலத்திலிருந்தே அவர்களது அடாவடித்தனங்கள் வளர்ந்து வந்தன. நினைவு கூரல் 15 ம் திகதி ஆரம்பமாகியிருந்தது. 14 ம் திகதி இரவு முன்னணியினர் நினைவிடத்தை மறைத்து பந்தல் போட முற்பட்ட போது அவ்வாறு போட வேண்டாம் எனக் கேட்கப்பட்டது.
அதற்கும் சண்டித்தனம் காட்டினர். இரண்டாம் நாள் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவப்படத்தை மறைத்து கொடிக்கம்பங்களை நாட்டினர். அவ்வாறு நட வேண்டாம் எனக் கூறிய போதும் சண்டைக்குச் சென்றனர். இறுதி நாளுக்கு முதல் நாள் இறுதி நாள் நிகழ்வுக்கான ஆயத்தங்களைச் செய்ய முற்பட்ட போதும் சண்டைக்குச் சென்றனர்.
இறுதி நாள் அதிகாலையில் இருந்தே நினைவிட சுற்றாடலை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் எவரையும் செயற்பட விடவில்லை. இறுதி நாளன்று கைதடியிலிருந்து  தூக்கு காவடி எடுத்து காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்தனர். நினைவிடத்திற்கு முன்னால் காவடியை இறக்க அனுமதிக்கவில்லை.
தீபம் ஏற்றுவதற்கு  8 நிமிடங்கள் இருந்தன. காவடியை இறக்கிய பின்னர் தீபம் ஏற்றுங்கள் எனக் கேட்ட போதும் அனுமதிக்கவில்லை. காவடியை இறக்கப்போகின்றனர் என்பதற்காக 3 நிமிடங்கள் முன்னரே தீபத்தை ஏற்றினர். அப்போது ஏற்பட்ட அமைதியின்மையால் வேலன் சுவாமிகள் அமைதி காக்குமாறு கூறிய போது ஒரு மதத் தலைவர் என்ற மதிப்புமில்லாமல் தகாத வார்த்தைகளினால் அவரைப் பேசினர்.
காவடி 10.40 க்கு நினைவிடத்திற்கு வந்த போதும் 11.15 வரை காவடியை இறக்க விடவில்லை. இந்நிலையில் முன்னாள் போராளிகள் தர்க்கப்பட்னர். தடைகளை மீறி காவடியை இறக்கினர். காவடி இறக்குவதை தடுப்பதற்காக பிரதான தீபத்தை காவடி இறக்கும் இடத்தில் வைத்திருந்தனர். இதன் போது தள்ளு முள்ளில் தீபத்தின் சுடு எண்ணெய் பட்டு சிலருக்கு தீக்காயங்களும் ஏற்பட்டன.
முன்னணியினர் இவ் நினைவு கூரல் நிகழ்வு தொடர்பாக அடுத்தடுத்து பல தவறுகளை விட்டிருந்தனர். அதில் முதலாவது கோட்பாட்டு ரீதியான தவறாகும். எந்த ஒரு செயற்பாட்டிற்கும் கோட்பாட்டு வெளிச்சம் அவசியமாகும். கோட்பாட்டு வெளிச்சம் இன்றி  மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் எப்போதும் குறைந்த விளைவுகளை தருவனவாகவே இருக்கும்.
நினைவு கூரல் தொடர்பான கோட்பாட்டு விவகாரத்தில் தேசமாக அணி திரளல், புதிய தலைமுறைக்கு வரலாற்றைக்கடத்துதல்,  தமிழ்த்தேசிய அரசியலை உயிர்ப்போடு வைத்திருத்தல்,  பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆற்றுப் படுத்தல்களைக் கொடுத்தல,  ஐக்கிய முன்னணி அமைத்து செயற்படுதல், என்பன முக்கியமானவையாகும். இவற்றில் எவற்றையும் முன்னணியினர் பின்பற்றவில்லை.
பொத்துவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ஊர்திப்பவனி நல்லதோர் செயற்பாடாகும். ஆனால் ஊர்திப்பவனியில் மக்கள் பங்கேற்பு என்பது பெரியளவிற்கு இருக்கவில்லை. ஊர்தியோடு ஒரு சிலரே வந்திருந்தனர். திலீபன் அனாதையாக இருப்பது போன்ற தோற்றத்தையே அது கொடுத்தது.
உண்மையில் வலுவான ஏற்பாடுகளுடன் கூடிய ஊர்திப்பவனியாக இருந்தால் ஒவ்வொரு ஊரினூடாக வருகின்ற போதும் ஊரவர்கள் ஊர் எல்லை வரை பவனியோடு வந்து வழியனுப்பியிருப்பர். ஊர்தியுடன் வருபவர்களுக்கான உணவுத் தேவைகளையும் ஊரவர்களே பூர்த்தி செய்திருப்பர். இதற்கான ஆயத்தங்களை ஒரு கட்சியால் மட்டுமே மேற்கொள்ள முடியாது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வடக்கு – கிழக்கு முழுவதும் செல்வாக்குப் பெற்ற கட்சியல்ல.
கிழக்கில் அதன் ஆதரவு மிகச் சொற்பமே. வடக்கு முகம் கூட அதற்கு இல்லை  யாழ்ப்பாண முகம் மட்டுமே உண்டு. இத்தகைய ஒரு கட்சியினால் தேசமாகத் திரண்டு ஊர்திப்பவனியை மேற்கொள்ள முடியாது. ஒரு கட்சியின் ஊர்திப்பவனி என்றால் மற்றைய கட்சிகள் ஆதரவு வழங்க கிட்டவும் வர மாட்டாது. அதுவும் முன்னணிக்கு எந்த கட்சியோடும் நல்ல உறவில்லை. பொது அமைப்புக்கள்,  தனி நபர்கள் கூட கட்சி சீல் தமது முதுகில் குத்தப்படும் என்பதற்காக உதவிக்கு வர மாட்டா.
அரசியல் கட்சிகளில் வடக்கு – கிழக்கு எனப்பரந்தளவில் செல்வாக்குள்ள கட்சி தமிழரசுக் கட்சி தான். அந்தக்கட்சியையும் அரவணைத்துச் செல்ல எந்த முயற்சியையும் முன்னணி எடுக்கவில்லை.
பொது அமைப்புக்களின் சார்பில் இந்த நினைவு கூரல் இடம் பெற்றிருக்குமாக இருந்தால் அரசியல் கட்சிகள்,  தனிநபர்கள், அனைவரும் கூட்டாக இதில் பங்குபற்றியிருப்பர். உண்மையில் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு கட்சிகள்,  பொது அமைப்புக்களின் ஐக்கியச் செயற்பாடு அவசியம்.  ஐக்கிய முன்னணியின் தேவை இங்கு பலமாக இருந்தது.
தேசமாகத் திரளல், அதற்கான ஐக்கிய முன்னணிச் செயற்பாடு என்பன இடம் பெறாததினால் கோட்பாட்டுச் செயற்பாட்டின் ஏனைய விடயங்களான புதிய தலைமுறைக்கு வரலாற்றைக் கடத்துதல்,  தமிழ்த்தேசிய அரசியலை உயிர்ப்புடன் வைத்திருத்தல்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு உள ஆற்றுப்படுத்தலைப் பெற்றுக் கொடுத்தல் என்பன போதியளவிற்கு இடம் பெறவில்லை. சுருக்கமாகச் சொன்னால் நினைவு கூரலின் நோக்கம் போதியளவிற்கு பூர்த்தி செய்யப்படவில்லை.
இரண்டாவது பண்பாட்டுத்தவறாகும் தமிழத்தேசத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களில் முக்கியமான இருப்பது அந்த மக்களை ஒன்றிணைக்கும் பண்பாடாகும். அது காலம் காலமாக தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். மதத்தலைவர்களை மதித்தல் பண்பாட்டுச் செயற்பாட்டில் மிக் முக்கியமான ஒன்று. தமிழ் மக்கள் இதனைக் காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர். இங்கு நினைவு கூரலில் மதத் தலைவர்களான வேலன் சுவாமிகள் இ குரு முதல்வர் ஜெபரட்ணம் என்போரை முன்னணியினர் மிக மோசமாக அவமானப்படுத்தியுள்ளனர். இது அருவருக்கத்தக்க பண்பாட்டு மீறலாகும். தவிர மதத்தலைவர்கள் அரசியல் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கு வருவது குறைவு. அவ்வாறு வந்தவர்கள் அவமதிக்கப்படுவார்களாயின் எதிர்காலத்தில் யார் வரப்போகின்றார்கள்.
மூன்றாவது தந்திரோபாயத்தவறாகும். அரசியல் செயற்பாடு என்பது மூலோபாயத்தை மட்டும் கொண்டதல்ல. தந்திரோபாயத்தையும் உள்ளடக்கியது. இது அரசியலுக்கு மட்டுமல்ல சாதாரண வாழ்க்கைக்கு கூட பொருந்தக் கூடியது. முன்னணியினரின் அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு தேர்தலை இலக்காகக் கொண்ட கட்சி அரசியலே பிரதான காரணமாகும். ஆகால் முன்னணியினரின் நடத்தை தேர்தல்அரசியலுக்கும் சாதகமானதல்ல. மதத்தலைவர்கள் இ முன்னாள் போராளிகள் இ காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இ அரசியல் கைதிகளின் உறவினர்கள்இ மாவீரர் குடும்பத்தவர்கள் இ பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்போரைப் பகைத்துக் கொண்டு தங்களுக்கான வாக்கு வங்கியை வழங்கி; எவ்வாறு தான் பெற்றுக் கொள்வார்கள். முன்னணியினர் தங்களுடனும் முன்னாள் போராளிகள் இருக்கின்றனர் என வாதிடலாம். சிலர் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே அவர்களுடன் இருந்தனர். பெரும்பான்மையோர் வெளியே தான் நின்றனர்.
இவற்றிற்கு அப்பால் முன்னணியினர் வலைத்தளங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் வசைபாடல்கள் அருவருக்கத்தக்கவையாக உள்ளன. அதுவும் முன்னாள் போராளிகள் இ மதத் தலைவர்கள் மீதான வசைபாடல்கள் சகிக்க முடியாதவையாக இருந்தன.
முன்னணியினர் எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு குறைந்தபட்சமாவது காத்திரமான பங்களிப்பைச் செய்ய விரும்பினால் வலைத்தளங்களில் தங்கள் பினாமிகளின் பெயரில் மேற்கொள்ளும் வசைபாடல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த வசைபாடல்கள் தமிழ ;மக்களை தேசமாகத் திரட்டுவதற்கும்இ தமிழத்தேசியத்தின் இருப்பைப் பேணுவதற்கும் பெருந் தடைகளை உருவாக்கும். அத்துடன் தாம் மேற் கொண்ட அடாவடித்தனங்களிற்கு தமிழ ;மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் . குறிப்பாக மதத் தலைவர்களை அவமானப்படுத்தியமைக்கு சம்பந்தப்பட்ட மதத் தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அதே வேளை பொதுக்கட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தவறிழைத்துள்ளனர். பொதுக்கட்டமைப்பு குறைந்த பட்சம் நினைவு கூரலுக்கு 6 மாதத்திற்கு முன்னரே ஆரம்பித்திருக்க வேண்டும். அவ்வாறு முன்னரே ஆரம்பித்திருந்தால் நினைவு கூரல் நாட்களில் இடம் பெற்ற குழப்பங்கழைத்தவித்திருக்கலாம்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு தமிழத்தேசியக்கட்சி. இந்திய  மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே நிற்கும் கட்சி அதனைப் பலவீனப்படுத்துவது நல்லதல்ல என்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது இதில் உண்மைகள் இருக்கலாம. இது உண்மையாக இருப்பின் அதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முன்னணிக்கே உண்டு.
ஒரு நண்பன் கூறினான் “ தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைப் பலவீனப்படுத்த வெளியிலிருந்து எவரும் தேவையில்லை அதுவே அதனைச் சிறப்பாக செய்யும். இந்த உண்மையையும் நிராகரிக்க முடியாது

Recommended For You

About the Author: admin