திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார்: தர்மலிங்கம் சுரேஸ்.

திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார். பாரத தேசம் அவருடைய உயிர் பறிபோவதற்கு காரணமாக இருந்தது. இன்னும் பாரத தேசம் இலங்கை தீவிலிருக்கின்ற தமிழர்களின் கோரிக்கையை மதிக்காமலுள்ளது.”என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியின் இரண்டாம் நாள் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் நேற்று(16) முனதினம் ஆரம்பமாகியது.

இதன்போது கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,“இந்திய இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக திலீபன் உண்ணா விரத போராட்டம் நல்லூரிலே 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி 5 அம்சக் கோரிக்கைகளுடன் ஆரம்பமானது.

உண்ணா நோம்பிருந்து, 12 நாட்கள் ஒரு துளி நீர்கூட அருந்தாது தனது உடலை கொஞ்சம் கொஞ்சமாக உருக்கி தன்னுடைய உயிரை அற்பணித்தார்.

அக்காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தமிழர்கள் வடக்கு கிழக்கு முழுவதும், துன்புற்றிருந்த வேளையிலும், இனத்திற்காக அவர் உயிர் நீத்துள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தமிழர்களுடைய அபிலாசை என்பது 13வது திருத்தத்திற்குள்ளே முடக்கப்பட்டு, ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட்டுள்ள வேளையிலே,அதற்கு எதிராக தமிழ் மக்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படல் வேண்டும். சிங்கள பௌத்த மயமாக்கல் அகற்றப்படல் வேண்டும். மேலும்,தமிழர் தயாகத்திலிருந்து காவல் துறையினர் வெளியேற வேண்டும் போன்ற அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து அவருடைய உண்ணா விரதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

ஆனால், இன்னும் அவருடைய கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவில்லை. திலீபன் இன்னும் தாகத்துடன்தான் இருக்கின்றார். பாரத தேசம் அவருடைய உயிர் பறிபோவதற்கு காரணமாக இருந்தது. இன்னும் பாரத தேசம் இலங்கைத் தீவிலிருக்கின்ற தமிழர்களின் கோரிக்கையை மதிக்காமலுள்ளது.
சிலர் 13வது திருத்தத்தை ஆதிக்கின்றனர். நாம் அதனை எதிர்க்கும் போது, அரசியலுக்காக எதிர்க்கின்றோம் என எம்மீது சிலர் சேறு பூசை முனைகின்றார்கள். எனவே திலீபனது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாமல் இருக்கின்றது.

 

மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படல் வேண்டும். அதற்காக திலீபனுடைய பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்.”என தெரிவித்துள்ளார்.

இதன்போது திலீபனின் உருவப் படத்திற்கு மக்கள் மலரஞ்சலி செலுத்தி, ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews