கொழும்பை பாதுகாக்கவே இந்தியா முயற்சிக்கும். கொழும்பா? தமிழ் மக்களா? என்று தெரிவு வந்தால் இந்தியா கொழும்பையே தெரிவுசெய்யும்…!அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

கொழும்பை பாதுகாக்கவே இந்தியா முயற்சிக்கும். கொழும்பா? தமிழ் மக்களா? என்று தெரிவு வந்தால் இந்தியா கொழும்பையே தெரிவுசெய்யும் என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவிதுள்ளர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வலுவான விசாரணைப் பொறிமுறையை இந்தியா ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. போர்க்குற்றம் என வருகின்றபோது இந்தியாவும் அதற்குள் அகப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. போரின் கடைசிக் காலத்தில் இந்தியா – இலங்கை கூட்டு ஆலோசனைக்குழு உருவாக்கப்பட்டு அதன்படியே யுத்தம் இடம்பெற்றது. போர்க்குற்றத்தை இந்திய அமைதிப்படைக்காலம் வரை நீட்டம் செய்தால் இந்திய அமைதிப்படையின் போர்க்குற்றங்களும் அரங்கத்திற்கு வரும் தவிர இந்திய நலன்களுக்கு முழு இலங்கைத் தீவும் தேவை என்பதால் கொழும்புடன் அதிகம் முரண்படாத முகத்தையே இந்தியா எப்போதும் காட்ட முயற்சிக்கும். அத்துடன் கொழும்பை பாதுகாக்கவே இந்தியா முயற்சிக்கும். கொழும்பா? தமிழ் மக்களா? என்று தெரிவு வந்தால் இந்தியா கொழும்பையே தெரிவுசெய்யும். அவர் மேலும் தெரிவித்ததாவது.

ஜெனிவா திருவிழா உச்சக் கட்டத்தை அடையத்தொடங்கியுள்ளது. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா தலைமையில் 6 நாடுகள் இணைந்து கொண்டு வர இருக்கும் புதிய பிரேரணையின் வரைபு கடந்த 13ம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது.

இந்த மாதம் 27ம் திகதி இப்பிரேரணை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட இருக்கின்றது. எப்போதும் கடைசி நேரத்தில் இந்தியா திருத்தங்களை செய்ய முன்வருவதால் இந்திய திருத்தங்களுடன் தான் புதிய பிரேரணை வெளிவருவதற்கு வாய்புகள் இருக்கின்றது. கொழும்பை திருப்திப்படுத்துவதற்காக இந்தியா தமிழ்மக்கள் நலன்கள் தொடர்பான ஏற்பாடுகளில் வெட்டுக் கொத்துக்களை மேற்கொள்வதே வழக்கம். இந்தத் தடவையும் அது இடம் பெறலாம்.

ஒரு வலுவான விசாரணைப் பொறிமுறையை இந்தியா ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. போர்க்குற்றம் என வருகின்றபோது இந்தியாவும் அதற்குள் அகப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. போரின் கடைசிக் காலத்தில் இந்தியா – இலங்கை கூட்டு ஆலோசனைக்குழு உருவாக்கப்பட்டு அதன்படியே யுத்தம் இடம்பெற்றது. போர்க்குற்றத்தை இந்திய அமைதிப்படைக்காலம்வரை நீட்டம் செய்தால் இந்திய அமைதிப்படையின் போர்க்குற்றங்களும் அரங்கத்திற்கு வரும் தவிர இந்திய நலன்களுக்கு முழு இலங்கைத் தீவும் தேவை என்பதால் கொழும்புடன் அதிகம் முரண்படாத முகத்தையே இந்தியா எப்போதும் காட்ட முயற்சிக்கும். அத்துடன் கொழும்பை பாதுகாக்கவே இந்தியா முயற்சிக்கும். கொழும்பா? தமிழ் மக்களா? என்று தெரிவு வந்தால் இந்தியா கொழும்பையே தெரிவுசெய்யும்.
புதிய பிரேரணை மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகரின் அறிக்கையையும் பரிந்துரைகளையும் ஒட்டியே வெளிவந்திருக்கின்றது. இந்தியாவின் விருப்பங்களும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவது அவசியம் எனவும் 13வது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகள் செயற்திறனாக இயங்குவதை உறுதிசெய்தல் அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தை ஜனநாயக மயப்படுத்துவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் விவகாரங்கள் என மனித உரிமை பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இருந்த பல விடயங்கள் சேர்க்கப்படவில்லை. சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கைகளை தொடருதல், மனித உரிமைகள் முன்னேற்றம் தொடர்பாக தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளுதல், அதிகாரப்பகிர்வு என்கின்ற விடயங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன.

முன்னர் எதிர்பார்க்கப்பட்டது போலவே இலங்கை அரசிற்கு கால அவகாசம் கொடுத்தலே முக்கிய தீர்மானமாக அமைந்துள்ளது. பந்தை அரசாங்கம் பேரவை மீது எறிந்தபோது பேரவை திரும்பவும் பந்தை இலங்கை அரசாங்கத்தின் மீதே எறிந்துள்ளது. இரண்டு தரப்பும் மாறிமாறி பந்து விளையாட்டையே மேற்கொள்கின்றன.

பேரவையின் 46(1) தீர்மானத்தையும் அதனை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அதனுடன் தொடர்புடையதாக மனித உரிமைகள் பேரவை ஸ்தானிகரின் பரிந்துரைகளையும் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் பலதடவை தெரிவித்துவிட்டது. இவ்வாறு தெரிவித்த பின்னரும் மீளமீள பொறுப்புக்கூறல் பொறுப்பை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதில் என்ன தர்க்க நியாயம் இருக்கிறதோ பேரவைக்குத்தான் வெளிச்சம். இதுதான் பேரவையின் பலவீனமாகக்கூட இருக்கலாம். இந்தப் பலவீனம் இலங்கை அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்ததினால்தான் பந்தை மீளமீள பேரவை நோக்கியே எறிகிறது. உன்னையே நீ விசாரணைசெய் எனக் கூறினால் எவரும் ஏற்கப்போவதில்லை.

 

மனித உரிமைகள் பேரவை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் உலக ஆதிக்கத்திற்கான ஒரு கருவி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இலங்கை தொடர்பான அமெரிக்க-இந்தியக் கூட்டின் பூகோள, புவிசார் அரசியல்தான் இந்த பந்தெறிதல் விளையாட்டிற்கான காரணம். அமெரிக்க-இந்தியக் கூட்டின் நலன்கள் அடிப்படையிலான இந்தோ-பசுபிக் மூலோபாயத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டுமானால் இலங்கைத்தீவின் மேலான சீனாவின் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தை அகற்றவேண்டுமானால் ராஜபக்சாக்கள் அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும். இதுதான் இங்கு செயற்படும் தர்க்க நியாய ஒழுங்காகும்.

சுருக்கக்கூறின் மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களின் முக்கிய இலக்கு ராஜபக்சாக்களை அரங்கிலிருந்து அகற்றுவதுதான். இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவை செயற்படத்தொடங்கிய காலத்திலிருந்து இதுவே நடக்கின்றது. இருதரப்புக்கும் இரு தரப்புக்களின் பலவீனங்களும் நன்கு தெரியும் என்பதால் பந்தெறிதல் விளையாட்டை சிறப்பாகவே மேற்கொள்கின்றன. இந்தத் தடவை பந்து மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவுகாலமும் போர்க்குற்றம் என்ற பந்தே எறியப்பட்டுள்ளது. ராஜபக்சாக்கள் பெரும்தேசியவாதம் என்ற முக மூடியை அணிந்திருந்ததால் பந்தினால் பெரியகாயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

 

இலங்கை இலாவகமாக பந்தை ஏந்தி பேரவைக்கே திரும்ப எறிந்தது. இந்தத் தடவை போர்க்குற்றம் என்ற மூலப்பொருளை சற்றுக் குறைத்து ஜனநாயக எதிர்ப்புப் போராட்டங்கள் அடக்கப்பட்டமை, பயங்கரவாதத் தடைச்சட்டம், பொருளாதாரக்குற்றம் என்கின்ற மூலப் பொருட்களையும் நன்கு சேர்த்து தயாரிக்கப்பட்ட பந்தை எறிந்ததனால் ராஜபக்சாக்கள் சற்று ஆடிப்போயினர் எனக் கூறலாம். வழக்கம் போல இருக்கும் தடுப்புக் கருவிகளான இறைமை, அரசியல் யாப்பு, மக்களின் அபிலாசை என்பன இந்தத் தடவை அதிகம் பயனளிக்கவில்லை.
2015ம் ஆண்டு மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது ராஜபக்சாக்கள் மேலெழக்கூடாது என்பதற்காகவே 46(1) தீர்மானத்தின் கீழ் கலப்பு நீதிமன்ற முறை முன்மொழியப்பட்டது. மைத்திரி – ரணில் அரசாங்கம் இம் மும்மொழிவை நடைமுறைப்படுத்தவில்லை.

இங்குதான் அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் இலங்கை அரசின் தீர்மானம் எது? இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் எது என்பதை பிரித்தறியத்தவறியது. போர்க்குற்றம் என்பது இலங்கை அரசின் தீர்மானத்தின்படி இடம்பெற்ற குற்றமாகும். எனவே எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கவே முற்படும். இதன்மூலம் அரசை பாதுகாக்கவே முற்படும் உள்ளகப் பொறிமுறைகள் அனைத்தும் தோல்வியடைந்ததற்கு இதுவே காரணமாகும்.

நல்லாட்சிக் காலத்தில் ராஜபக்சாக்களை அரங்கிலிருந்து அகற்றுவதற்காகவே 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. 19வது திருத்தத்துக்கு ஒரு ஜனநாயகமுகம் இருந்தாலும் அதன் பிரதான இலக்கு ராஜபக்சாக்கள் தான். ஒருவர் இரண்டு தடவை மட்டும் ஜனாதிபதியாக இருக்கலாம,; வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜனாதிபதி வேட்பாளருக்குரிய வயதெல்லையை 35 வயது என மாற்றியமை. அனைத்தும் ராஜபக்சாக்களை அகற்றுவதற்கு கொண்டுவரப்பட்டவைதான்.
அதிகாரங்களை ஓரிடத்தில் குவிப்பது தான் ராஜபக்சாக்களுக்கு பாதுகாப்பு. அவர்கள் குடும்பத்தைச் சுற்றி அதிகாரத்தைக் குவித்தார்கள். 18வது திருத்தம், 20வது திருத்தம் எல்லாம் அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்தவையே! ஜனநாயக சூழலில் ராஜபக்சாக்களுக்கு அரசியல் வாழ்வு இல்லை.

எந்த நெருக்கடி வந்தாலும் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழும் ஆற்றல் ராஜபக்சாக்களுக்கு உண்டு. 2015ல் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சாக்கள் உயிர்த்தெழுவதற்கு பெரும் தேசியவாதத்தைக் கையில் எடுத்தார்கள். மகிந்தர் விகாரைகளை தனது பிரச்சார முகமாக்கிக் கொண்டார். கூட்டுறவுச் சங்கத் தேர்தல், உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் என கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மீண்டும் உறுதியான பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றினர். புவிசார் அரசியலும், பூகோள அரசியலும் தங்களுக்கு எதிராக இருக்கும் என்பதால் அதற்கு முகம் கொடுப்பதற்காக சீனா இலங்கையில் காலூன்றுவதற்கான வழிகளையும் திறந்துவிட்டனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு முகம் கொடுப்பதற்காக ராஜபக்சாக்கள் பெரும் தேசியவாதம், சீன ஆதரவு, மக்களின் அபிலாசைகள், இறைமை, அரசியல் யாப்பு என ஐந்து கவசங்களை எப்போதும் அணிந்திருந்தனர்.

46(1) தீர்மானத்தை நிராகரிப்பதற்கு இறைமை, யாப்பு, மக்கள் அபிலாசைகள் என்பவற்றை எப்போதும் முன்வைத்தனர். ராஜபக்சாக்களின் இந்த வியூகங்களை உடைப்பதற்காகத்தான் இந்தத் தடவை சிங்கள தேசத்தின் விவகாரங்களும் சேர்க்கப்பட்டன. தனித்துப் போர்க்குற்றம் என்ற விவகாரத்தை மட்டும் கவனத்தில் எடுக்காமல் ஜனநாயகப் போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறை, பொருளாதாரக்குற்றம், ஊழல் என்கின்ற மூலப்பொருட்களையும் சேர்த்து பந்து தயாரிக்கப்பட்டது.

இருப்பினும் போர்க்குற்றம் என்ற மூலப்பொருள்தான் நிரந்தரமானது என்பது மேற்குலகத்திற்கு நன்கு தெரியும். ஏனைய மூலப்பொருட்கள் அரசாங்கங்கள் மாறும்போது மாறக்கூடியவை.
இவ்வளவு காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது பொக்கற்றுக்குள் இருந்தமையினால் தமிழ் மக்களது அபிலாசைகளை மேற்குலகம் பெரியளவிற்கு கணக்கெடுக்கவில்லை. இந்தத் தடவை அந்த நிலைமை இருக்கவில்லை.

மேற்குலகத்திற்கு சார்பான சுமந்திரன் அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டார். கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியலோடு ஒத்துப்போவதற்கு தமிழ்த் தேசியச் சக்திகள் தயாராக இருக்கவில்லை.
இதனால் இந்தத் தடவை ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களையும் திருப்திப்படுத்தவேண்டிய தேவை மேற்குலகத்திற்கு இருந்தது. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகளும் உள்ளடக்கப்படுவதற்கு இதுவே காரணமாகும். சில உண்மைகளை வெளிப்படையாகக் கூறவேண்டிய நிர்ப்பந்தம் மேற்குலகத்திற்கு ஏற்பட்டது. உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் பரிந்துரையிலும் காணப்பட்ட பொறுப்புக்கூறல் முயற்சிகள் போதியளவிற்கு இடம்பெறவில்லை.

சிங்கள – பௌத்த பேரினவாத அடிப்படையில் அமைந்த அரசாங்கமே அனைத்திற்கும் காரணம். தமிழர் தாயகத்தில் அதிகரித்த இராணுவ பிரசன்னம், இராணுவம் பறித்த காணிகளை விடுவித்தல், தொல்லியல் ஆக்கிரமிப்பு, சாட்சிய சேகரிப்பை நீடித்தல், ஆணையாளரின் இலங்கைப் பிரசன்னம், பேரவையின் கண்காணிப்பு தொடரப்படுதல் என்பவை அந்த நிர்ப்பந்தத்தையே வெளிப்படுத்துகின்றன.

இது வெளிப்படுத்தும் உண்மை இதுதான். இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிக்கான தீர்வில் தமிழ் மக்களுக்கும் கௌரவமான இடமுண்டு என்பதே அதுவாகும். இன்னோர் உண்மையும் வெளிப்பட்டுள்ளது. சர்வதேச அரசியலிலும் தமிழ் மக்கள் செயற்படுவதற்கான இடைவெளிகள் உண்டு என்பதே அதுவாகும். இந்த இரண்டு உண்மைகளையம் கோட்பாட்டு ரீதியாகப் புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். தமிழ்த் தேசிய அரசியலின் நகர்வுகளுக்கு இந்த இரண்டு கோட்பாட்டு உண்மைகளுமே வெளிச்சத்தைத் தரப்போகின்றன. இது உண்மைகளே அல்ல என யாராவது வாதிடுவார்களாயின் அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வது நல்லது.

மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் பல பிரேரணையில் இல்லை என்பது பற்றி தமிழ் மக்கள் அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. வல்லரசுகள் மூக்குடைபட மட்டும் பொறுமை காப்பது நல்லது. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் கருத்துக்களும் மேற்குலக கருத்துகளின் ஒரு பகுதியே என்பதை நினைவில் வைத்திருப்பது தற்போதைக்கு போதுமானது.

Recommended For You

About the Author: Editor Elukainews