கொழும்பில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!: பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, உறுப்பினர்களான ஸ்ரீ தம்ம தேரர் மற்றும் அஷான் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள  இவ் எதிர்ப்பு பேரணியானது கொழும்பு ஹயிட் பார்க் மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

”ஆட்கடத்தல் மற்றும் சிறைப்பிடித்தலை நிறுத்து”, “அனைத்து போராளிகளையும் உடனடியாக விடுதலை செய்”, “பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறை சட்டங்களையும் ரத்து செய்” மற்றும் “ரணில் ராஜபக்ச ஆட்சியை விரட்டியடிப்போம்”, “மக்கள் உரிமைக்காக போராடுவோம்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளதுடன் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சுதந்திர தேசிய சபையின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்னிலை சோசலிசக் கட்சியின் சார்பில் துமிந்த நாகமுவ, 43 படைப்பிரிவின் சார்பில் தீக்ஷன கம்மன்பில மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

அத்துடன்  போராட்டம் நடைபெறும் ஹைட்பார்க் மைதானத்திற்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தண்ணீர் தாரை தாக்குதல் வாகனம், கலகத்தடுப்பு பிரிவினர் ஆகியோர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: admin