தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட இலங்கை பெண் ஜப்பானில் மரணம்…!

ஜப்பானில் வீசா ஒழுங்குகளை மீறியமைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் மரணம் தொடர்பில் ஜப்பான் நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது.

உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு முன்னரான இறுதி நாட்களை வெளிப்படுத்தும் காணொளியினை சமர்ப்பிக்குமாறு ஜப்பானின் நகோயா மாவட்ட நீதிமன்றம், அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2021 மார்ச் மாதம் குறித்த பெண் இறக்கும் வரை இரண்டு வாரங்களில் 295 மணிநேர பாதுகாப்பு புகைப்படக் காட்சிகளை ஜப்பானிய குடிவரவு சேவைகள் நிறுவனம் பதிவு செய்திருந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த விஷ்மா சந்தமாலி எனும் பெண் ஒருவர் 2017 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக ஜப்பானுக்க சென்றிருந்தார். எனினும் விசா காலாவதியானமையினால் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்திருந்ததாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதுரகம் உறுதி செய்திருந்தது.

இதன்போது அங்கு அவருக்கு வழங்கப்பட்ட உணவு தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், அந்த உணவினால் அவர் பலவீனமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஆறு சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் குறித்த பெண்ணை பரிசோதித்ததாகவும், இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும்,பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும் அவரது உயிரிழப்புக்கான உறுதியான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தனது சகோதரியின் இறுதி நாட்கள் தொடர்பில் செப்டெம்பர் 28 ஆம் திகதியன்று ஐந்து மணிநேர காட்சிகளை சமர்ப்பிக்குமாறு ஜப்பான அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டமை தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக உயிரிழந்த யுவதியின் சகோதரி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews