இந்த வெற்றி முழு இலங்கைக்கும் உரித்தானது! பானுக ராஜபக்ச உற்சாக பேச்சு

பார்வையாளர்கள் வழங்கிய ஆதரவுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ணத்தை வெற்றியீட்டியதை தொடர்ந்து இன்று நாடு திரும்பிய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. கிரிக்கெட் வீரர்கள் என்ற ரீதியில் எங்களது திறமைகளை வெளிப்படுத்தவே எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று குழுவில் இருந்த அனைவரும் திறமைகளை வெளிப்படுத்தி இருக்கின்றோம்.

அத்துடன் பல சவால்களுக்கு முகம் கொடுத்தே நாங்கள் இந்த போட்டிகளில் வெற்றி பெற்றோம். இந்த நம்பிக்கையுடன் முன்னோக்கி பயணிக்க எதிர்பார்க்கின்றோம். உலகக் கிண்ண போட்டியிலும் இவ்வாறு விளையாடி வெற்றியடையவே எதிர்பார்க்கின்றோம்.

மேலும் எங்களுடைய குழுவில் இருந்த ஒற்றுமையை அனைவரும் கண்டிருப்பார்கள். நாங்கள் ஒருவர் போல் ஒற்றுமையாக செயற்பட்டோம். அதனை நாங்கள் கூறுவதை விட கண்டவர்கள் அதிகளவில் எங்கள் ஒற்றுமையை அறிந்திருப்பார்கள்.

எங்களுடைய ஆதரவாளர்கள் எங்களுக்கு வழங்கும் ஆதரவு விளையாட்டு வீரர்கள் என்ற ரீதியில் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றது. நாங்கள் சில வருடங்கள் வெற்றிக்கு அருகில் கூட செல்லாத நிலையில் காணப்பட்டோம்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட பின் நின்று எங்களுக்கு வழங்கிய ஆதரவுக்கும் ஒத்துழைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த வெற்றி முழு இலங்கைக்கும் உரித்தானது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மக்களின் முகத்தில் ஒரு சிரிப்பை கொண்டு வருகின்றோமென்றால், அதனை மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் பார்க்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: admin