அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பில் சட்டமா அதிபர் ஆட்சேபனை.

காலிமுகத்திடல் போராட்டத்தில் முக்கிய பங்கை வகித்த அருட் தந்தை ஜீவந்த பீரிஸ், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பில் தமக்கு கடும் ஆட்சேபனை இருப்பதாக சட்டமா அதிபர்  உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளரான ஜீவந்த பீரிஸ், தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி, உயர் நீதிமன்றில் முன்னர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில்,  சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்கிரம, முறையான நீதி நடைமுறைகளை பின்பற்றாமல் சுருக்கமான முறைகளில் நிவாரணம் கோரும் சமர்ப்பிப்பை அங்கீகரிக்க முடியாது என வாதிட்டுள்ளார்.

தெஹிதெனிய, எஸ்.துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்விலேயே இந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் யோர்க் வீதிக்குள் நுழைவதற்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்ததாக குறிப்பிட்ட அரச சிரேஷ்ட சட்டத்தரணி, மே 27ஆம் திகதி மனுதாரருக்கு இதனை கோட்டை பொலிஸார் அறிவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக ஒன்றுகூடல், நீதிமன்ற அவமதிப்பு, அரச ஊழியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு செய்தல், குற்றவியல் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மனுதாரருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை செய்துள்ளதாகவும், மனுதாரர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் பொலிஸாரின் அறிவித்தலுக்கு அமைய மனுதாரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனவும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, அருட்தந்தையை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தனது கட்சிக்காரருக்கு எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கு தொடர்பாக ஏதேனும் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகள் இருந்தால் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. அத்துடன், இந்த மனுவை செப்டெம்பர் முதலாம் திகதிக்கு அழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews