விரும்பாத ஓ.எம்.பியை தமிழ் தரப்பு அரசாங்கத்திடம் கேட்க வேண்டாம்! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் விரும்பாத ஓ.எம்.பி அலுவலகத்தை அரசாங்கத்துடன் பேசும் தமிழ் தரப்புகள் ஓ.எம்.பியை விரைவுப்படுத்துமாறு கூறுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இலங்கையில் இடம்பெறும் உள்ளக விசாரணையில் திருப்தி அடையாததால் சர்வதேச விசாரணையை கோரினோம்.

ஐ.நாவினால் பரிந்துரைக்கப்பட்ட ஓ.எம்.பி அலுவலகத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என ஐ.நாவுக்கு தகுந்த காரணங்களுடன் ஏற்கனவே எடுத்துக்கூறி ஏற்கமாட்டோம் என தெரிவித்தமை யாவரும் அறிந்தது.

இலங்கையில் ஓ.எம்.பி அலுவலகத்தின் செயற்பாடுகள் பரிந்துரைத்தமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு எதிர்பார்க்கும் நீதியைப் பெற்று தரவில்லை என்பது சர்வதேசத்திற்கு தெரிந்த விடயம்.

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் பேசப்பட்ட நிலையில் ஓ.எம்.பி அலுவலகத்தின் செயற்பாடுகளை விரைவுப்படுத்துமாறு சிலநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியமை எம்மை ஆத்திரமூட்டும் செயற்பாடாக அமைகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஓ.எம்.பி அலுவலகத்தை நிராகரித்தமை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயமாகக் காணப்படுகின்ற நிலையில்,தெரிந்து கொண்டே அவ்வாறு கேட்பது நியாயமற்ற செயலாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தமை எமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் அரசாங்கத்துடன் சேராமல் இருப்பது ஒரு வகையில் மன நிம்மதியை தருகிறது.

13 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்த 130 மேற்பட்ட உறவுகள் இறந்த நிலையில் எமது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து கொண்டே செல்கின்றோம்.

ஆரம்பத்தில் தமது பிள்ளைகளை காணவில்லை என தேடி அலைந்து போராட்டங்களை நடத்திய நிலையில் உறவுகள் ஒன்று சேர்ந்து எமது பிள்ளைகளை காணவில்லையென தொடர்ச்சியான போராட்டமாக மாற்றம் பெற்றது.

தற்போதைய சூழலில் தமிழ் போதும் மக்களின் உரிமைக்கான போராட்டமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டு செல்கின்ற நிலையில் அனைவரும் இதற்கு வலுச் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews