13வது திருத்தத்தை தமிழ் மக்களது தலையில் கட்ட முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது…..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இந்த வாரம் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்பு. இரண்டுமே தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரிய நம்பிக்கைகள் எவற்றையும் கொடுக்கவில்லை.
ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் இரண்டு விடயங்களை முக்கியமாக குறிப்பிட்டார். ஒன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுத்தல், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெறுதல் என்பனவே அவ்விரண்டுமாகும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது என்பதனால் இரண்டையும் அவர் கூறியிருக்கலாம்.


தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது அவசியம் என பொத்தம் பொதுவாகக் கூறினாரே தவிர தீர்வு எவ்வாறான தீர்வு, அதனை அமைப்பதற்கான வழி வரைபடம் என்ன என்பது பற்றி தெளிவாக எதனையும் கூறவில்லை. சர்வதேச அபிப்பிராயத்தை திரட்டுவதற்கு அரசியல் தீர்வு பற்றியும் பேசவேண்டியது அவசியம் என்பதால் ஒரு சடங்கிற்காகக்கூட அவர்கூறியிருக்கலாம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசியல் தீர்வின் உள்ளடக்கமும், வழிவரைபடமும் முக்கியம். அரசியல் தீர்வு என்ற பெயரில் 13வது திருத்தத்தை தமிழ் மக்களது தலையில் கட்ட முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அரசியல் தீர்வை இலங்கை என்ற அதிகாரக் கட்டமைப்புக்குள் சாத்தியமாக்குவதற்கு தென்னிலங்கையில் ஒரு அரசியல் கலாச்சார மாற்றம் தேவை. அது சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முன்னர் சிங்கள அரசியல் கட்சிகளிடம் உருவாக வேண்டும்.


சிங்கள தேசத்தில் செயற்படும் இரண்டு பிரதான அணிகளில் மொட்டு அணி இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாகவே கூறுவதற்கு இன்னமும் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் பிரச்சினை என்பது வெறும் அபிவிருத்திப் பிரச்சினைதான். சஜித் அணி 13வது திருத்தத்திற்குள்ளேயே நிற்கின்றது அதற்குக் கூட கட்சியை தயார்படுத்தியுள்ளார் எனக் கூற முடியாது.

சிவப்பு அணியைப் பற்றிக் கூறவே தேவையில்லை அவர்கள் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், காஸ்மீர் போராட்டம் என்பவற்றிற்கு ஆதரவு கொடுப்பார்கள். தமிழ் மக்களின் விவகாரம் என வரும்போது அவர்களுடைய மாக்சீய அரசியலே சுருங்கிப்போகும். பெரும்தேசியவாதத்திற்குள் தொப்பென விழுந்து நீந்தி அதில் சுகம் காண்பார்கள்.
எனவே சிங்கள தேசத்தில் கலாச்சார மாற்றத்திற்கான எந்த ஒரு முயற்சியையும் செய்யாது வெறுமனவே சடங்கிற்கு அரசியல் தீர்வு அவசியம் எனக் கூறுவது பச்சையான ஏமாற்றுத்தனம் என்றே கூறவேண்டும். குறைந்தபட்சம் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்திற்கான நல்லெண்ண சைகைகளைக் கூட வலுவாகக் காட்டியிருக்கலாம். அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், தினம்தோறும் இடம்பெறும் பச்சை ஆக்கிரமிப்புக்கள், பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் போன்றவற்றிற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்கின்ற

உத்தரவாதங்களை வழங்கியிருக்கலாம். அவை எதுவும் இருக்கவில்லை.
பொருளாதார நெருக்கடித் தீர்விற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவது என்பது முழுக்க இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியிலேயே தங்கியுள்ளது. இது விடயத்தில் நம்பிக்கையான உத்தரவாதங்கள் இல்லாமல் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து ஒத்துழைப்புக்கும் என எதிர்பார்க்க முடியாது.


இந்த நெருக்கடி என்பது வெறுமனவே பொருளாதார நெருக்கடியல்ல. ஒரு அரசியல் பொருளாதார நெருக்கடி. இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரதும் நலன்களுக்கும் உத்தரவாதம் இல்லாமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாது. ஏனெனில் நாட்டில் ஸ்திரமான அரசியல் நிலை அவசியம். நலன்களுக்கு உத்தரவாதம் இல்லாமல் அரசியல் ஸ்திர நிலை ஒருபோதும் உருவாகாது.
குறிப்பாக தமிழ் மக்கள் இன்று அரச அதிகாரக் கட்டமைப்புடன் இல்லை. அதற்கு வெளியேதான் நிற்கின்றனர். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் தமிழ் மக்கள் வெளியே தள்ளப்பட்டனர். அவர்கள் உள்ளே வரவேண்டுமாயின் இலங்கைத் தேசியம் ஒன்று கட்டமைக்கப்படல் வேண்டும். அந்தத் தேசியத்திற்குள் தமிழ் மக்களிற்கான உத்தரவாதங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இது உறுதிப்படுத்தாதவரை தமிழ் மக்கள் வெளியேதான் நிற்கப்போகின்றனர். சுமந்திரன் இவற்றிற்கான உத்தரவாதங்கள் எதுவுமில்லாமல் அதிகாரக் கட்டமைப்புடன் கலப்பதற்கான முயற்சிகளைச் செய்தார். ஒவ்வொருதடவையும் அவர் தோல்வியினையே தழுவினார்.


சிங்கள தேசத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான விடயங்கள் பல ஜனாதிபதியின் உரையில் வந்திருக்கின்றன. காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் அரசியல் நிலைப்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஒரு தோற்றமும் உரையில் தெரிகின்றது. ஒரு பக்கத்தில் போராட்டக்காரர்களை ஒடுக்கிக்கொண்டு அவர்களது நிலைப்பாடுகளை உள்வாங்குவது போன்ற தோற்றத்தைக் கொடுப்பதும் ஒருவகைத் தந்திரம் தான். தேசிய வேலைத்திட்டம், அதற்கான தேசியச்சபை, மக்கள் சபை, என்பன போராட்டக்காரர்களின் முன்மொழிவுகளே! இங்கு தேசியவேலைத்திட்டமும் தேசியசபையும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை மட்டும் உள்ளடக்கி உருவாக்கப்படுவதற்கே யோசனைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. காலிமுகத்திடல் போராட்டக்காறர்கள் வெளியே போராட்டத்தை நடாத்துபவர்களுக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் பங்கு கொடுக்கப்படல் வேண்டும்எனக் கேட்டிருந்தனர்

.

மக்கள் சபை சுயாதீனமாக அமைப்பாக இருக்கும் என ஜனாதிபதி கூறியிருக்கின்றார். வளங்களை மட்டும் அரசாங்கம் வழங்கும் என்றும் கூறியிருக்கின்றார். அதன் அமைப்பு உள்ளடக்கம் பற்றி பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானிப்போம் எனவும் எனவும் கூறியிருக்கின்றார். இவற்றிற்கு மேலதிகமாக பாராளுமன்ற மேற்பார்வையாளர் குழு, போராட்டக்காரர்களைப் பாதுகாக்கும் செயலணி என்பவை பற்றியும் கூறப்பட்டடிருக்கின்றது. 22 வது திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதற்கு ஒத்துழைப்புத் தரும்படியும் கேட்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் இந்த முன்மொழிவுகள் ஜனநாயகப்படுத்தலுக்கும் பல மக்கள் பங்கேற்பு அரசியலுக்கும் அவசியமானவையே! வளர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளில் இவை அதிகளவில் உள்ளடங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை சிங்கள தேசத்தை ஜனநாயகப்படுத்தும் முயற்சிகளே தவிர முழு இலங்கைத்தீவையும் ஜனநாயகப்படுத்தும் முயற்சிகளல்ல. முழு இலங்கைத்தீவையும் ஜனநாயகப்படுத்துவதற்கு முன் நிபந்தனை ஒடுக்கப்படும் தேசிய இனங்களை அவர்களின் அடையாளங்களுடன் அதிகாரக்கட்டமைப்பில் உள்வாங்குவதே! இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படாமல் எந்த ஜனநாயக முன் மொழிவுகளைக் கொண்டு வந்தாலும் அது ஒரு போதும் ஜனநாயகத்தைக் கொண்டு வராது.

ஒரு பகுதி மக்களைக் கொடூரமாக ஒடுக்கிக் கொண்டு இன்னோர் பகுதியில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முடியாது. இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து ஜனநாயக முயற்சிகளும் தோல்வியடைவதற்கு இதுவே பிரதான காரணமாகும். இன்னொரு தேசிய இனத்தை ஒடுக்கும் எந்தத் தேசிய இனமும் தானும் விடுதலையடையப்போவதில்லை என்ற  கால்மாக்சின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கதாகும்
இரண்டாவது விடயம் ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பாகும் இது விடயத்தில் வழமையான தவறுகளைக் கூட்டமைப்பு இந்தத் தடவையும் விட்டிருக்கின்றது. ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் இருப்புத் தொடர்பாக ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் ஜனாதிபதியுடன் பேசச் செல்கின்றோம் என்கின்ற எந்த வித பொறுப்புணர்வும் இல்லாமல் வெறுமனவே கையை ஆட்டிக் கொண்டு

Recommended For You

About the Author: Editor Elukainews