மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு!

மலையக பிரதேசங்களில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையக பகுதிகளில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது.
இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. கண்டி நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலி வீதி, பவ்வாகம, சேலம் பிரிட்ஜ், ஓவிட்ட, அயன்போட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களும் நீரில் முழ்கியுள்ளன.
மழை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் 100ற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன், மேலும் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பகுதியில் உள்ள மகாவலி ஆற்றிற்கு நீர் வழங்கும் பவ்வாகம ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்ததால் வெள்ள நீர் இவ்வாறு பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
தமது வீட்டில் ஒரு அறையேனும் இல்லாமல் வீடு முழுவதும் வெள்ள நீராக காணப்படுவதாகவும், தமது அலுமாரியில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் என பல பொருட்கள் வெள்ள நீரில் சேதமாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்ட 100ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 350ற்கும் மேற்பட்டோர் உறவினர்கள் வீடுகளிலும், அயலவர்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பாதிக்கப்பட்டவர்களை குறித்த பகுதி கிராமசேவகர் பார்வையிட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியோரின் கவனத்திற்கும், மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை நுவரேலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews