மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமை மீன்பிடிப்பதற்கு அனுமதி சீட்டை பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும், 6 மீனவர்களையும் கைது செய்துள்ளது.

இதையடுத்து நேற்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஜான் மடிக்கட்டும் இடத்தில் இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களையும், விசைப்படகையும் மற்றும் கடந்த 2018 முதல் தற்போது வரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் நேற்று முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை,தனுஷ்கோடியில் கடலில் காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் மீனவ தொழிற்சங்கம் சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews