அமைச்சரவை கூடததால் பொருளாதாரம் முடங்கும் நிலை –

அமைச்சரவை கூடாத காரணத்தினால் எரிபொருள் உள்ளிட்ட அவசரகால கொள்வனவுகளுக்கு பணத்தை ஒதுக்க முடியாமல் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை (11) நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி பங்கேற்காத காரணத்தினால் காலவரையறையின்றி பிற்போடப்பட்டமையினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் மூலம் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கொள்வனவுகளுக்கு மின்சக்தி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பிரதமரின் பிரேரணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும், அமைச்சரவையின் அனுமதியின்றி எவ்வித உத்தரவாதமும் வழங்க முடியாது எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சுடன் கலந்தாலோசித்து, உள்ளூர் வங்கிகள் மூலதனச் சந்தையில் இருந்து 128 மில்லியன் டொலர்களைப் பெறுவதற்கு உரிய அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தன.

ஜூலை 12 முதல் ஜூலை 18 வரை இலங்கைக்கு வரவிருந்த டீசல், எரிபொருள் எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெய் ஆகிய மூன்று சரக்குகளுக்கு இந்தக் கொடுப்பனவுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அந்த மூன்று கப்பல்களுக்கும், இன்று 61.72 மில்லியன் டொலர்கள் (22,650 பில்லியன் ரூபாய்),  மேலும் 28.26 மில்லியன் டொலர்கள் (10,371 பில்லியன் ரூபாய்), ஜூலை 17 அன்று 89.04 மில்லியன் டொலர்கள் (32,678 பில்லியன் ரூபாய்) செலுத்தப்பட இருந்தது.

இந்த பணம் செலுத்தப்படாவிட்டால், எண்ணெய் டேங்கர்களுக்கான ஆர்டர்கள் ரத்து செய்யப்படுவதுடன், எண்ணெய் விநியோகம் மேலும் தாமதமாகும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தற்போதுள்ள மூன்று மணித்தியால மின்வெட்டை நீடிக்காமல் பேணுவதற்கு இந்த எண்ணெய் இருப்பை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அரசாங்க பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews