ஐஓசி லங்கா தொடர்பில் அங்கஜன் இராமநாதன் சீற்றம்…!

யாழ்.மாவட்டத்திலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக மக்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு எடுக்கப்பட்ட பொது தீர்மானங்களுக்கு மாறாக மாவட்டச் செயலகத்திலுள்ள சில அதிகாரிகளும், ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தினரும் நடந்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சாடியுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவித்ததாவது, கடந்த செவ்வாய் கிழமை யாழ்.பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக 1250 மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாய் வீதமும்,  500 கார்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு 2000 ரூபாய் வீதமும் எரிபொருள் வழங்கப்படும். எனவும் அதேபோல் அத்தியாவசிய ஊழியர்கள் 600 பேருக்கு மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாய் வீதமும்,

50 கார்களுக்கு 3000 ரூபாய் வீதமும், எரிபொருள் வழங்கப்படும். என 04.07.2022ம் திகதி பொது தீர்மானம் எடுக்கப்பட்டது.  ஆனாலும் டோக்கன் பலருக்கு கொடுக்கப்படாதுடன்,

வேண்டப்பட்ட சிலருக்கு மிகை அளவில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு யாழ்.மாவட்டச் செயலகத்திலுள்ள சில அதிகாரிகளும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினரும் பூரணமாக உடந்தை என முறையிடுக்கிறார்கள்.

குறித்த முறைப்பாட்டினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். அன்று இரவு 10 மணிக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படுவரை  பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது முறைப்பாடு கொடுத்தவர்களுக்கு எந்தவொரு தீர்வும் வழங்கவில்லை.

இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பொதுத் தீர்மானம் என்பது அனைவருக்கும் சமமான எந்தவொரு தரப்பையும் பாதிக்காத வகையில் எடுக்கப்பட்டதாகும்.

செல்வாக்குள்ளோர் எவ்வளவு எரிபொருளும் பெறலாம் என்றால் பொதுத் தீர்மானம் எதற்கு? தேவையான எரிபொருள் கிடைக்காமல் கிடைத்ததை பெற்றுக் கொண்டு பொதுமக்கள் வீடு திரும்பும் இந்த காலத்தில்,  இவ்வாறான செயற்பாடுகள் அருவருக்கத்தக்கது. எடுக்கப்படும் ஒரு பொதுத் தீர்மானத்தின்படி அனைத்தும் நடக்கும் போதே யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் சகலருக்கும் கிடைக்கும். விநியோகமும் சீராகும்.

அவ்வாறு பாதகமான செயற்பாடுகள் இடம்பெறுகிறபோது அதனை உடனடியாக தடுத்து நிறுத்தக்கூடிய அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்ககூடியவர்கள் அதை செய்யவேண்டும்.  பொதுமக்களும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்யவேண்டும் என அங்கஜன் மேலும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews