உரப் பையில் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொதுச் சந்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் உரப் பையில் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை அல்லாப் பிச்சை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பெண் நேற்று காலை 11 மணியளவில் வங்கிக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளார்.

குறித்த பெண்ணை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றதாகவும் அவரே பெண்ணை கொலை செய்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். அந்த பெண் மாவடிச்சேனை பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து கொலைசெய்யப்பட்ட பின்னர், உரப்பையில் இட்டு முச்சக்கர வண்டியில் அவரது உடலை எடுத்துச் சென்று

வழைச்சேனை பொதுச் சந்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் சந்தேக நபர் வைத்து விட்டு சென்றதாவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த கடை உரிமையாளரிடம் பை ஒன்றை கொண்டு வந்த நபர் அதனை தனது கடையில் வைத்து விட்டு சிறிது நேரத்தின் பின் எடுத்துச் செல்வதாக கூறி விட்டு, பையை வைத்து சென்றுள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.

குடும்பத்துக்குள் ஏற்பட்ட கொடுக்கல், வாங்கல் முரண்பாடே இக் கொலைக்கு காரணம் என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பெண்ணை கொலை செய்த நபரையும், பெண்ணின் சடலம் வைக்கப்பட்ட கடை உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews