கடற்படையினரின் செயற்பாடு குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஸ்டாலின் உத்தரவு.!

இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான வன்முறையையும் நிகழ்த்தக்கூடாது என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த ஆகஸ்ட் 1-ம் நாள் அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் ஒன்பது மீனவர்களும் இந்தத் தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாகத் தப்பியுள்ளனர்.

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்.

இந்தச் சம்பவம், தமிழ்நாட்டில் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்ய வேண்டியது நமது கடமையாகும்.

எனவே, இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews