அழிவடையும் நிலையில் மாருதப்புரவள்ளி வாழ்ந்து பாவ விமோசனம் பெற்ற குகை!

யாழ்.வலி, வடக்கு கீரிமலை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள புராதன வரலாற்று கதைகளுடன் தொடர்புபட்டதாக அறியப்படும் கற்குகை அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் “மாருதப்புரவல்லியின் குதிரை முகம் நீங்க கீரிமலையில் தீர்த்தமாடிய கதைகளுடன் தொடர்புபட்ட குறித்த கற்குகையை அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்த குகையானது மூன்று பிரதான வாயில்களைக் கொண்டதாக அறியப்படும் நிலையில் ஒருபக்க வாயில் கீரிமலை தீர்த்தக் கேணியை சென்றடைவதுடன் மறுபக்க வாயில் தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள விஷ்ணு ஆலயத்தை சென்றடைவதாகவும் கூறப்படுகிறது.

இன்னுமொரு வாயில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தை நிலத்துக்கு கீழாக சென்றடையக் கூடிய வகையில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

யுத்தத்திற்குப் பின்னர்  கற்குகை  அதன் மூன்று பக்க வாயில்களை கொண்டுள்ள நிலையிலும் அதன் இணைப்புகளை இழந்த நிலையில் காணப்படுகிறது.

குகையின் அனைத்து வாயில்களும் மாருதப்பூரவல்லி  குகைகளில் தங்கியிருந்து எவருக்கும் தனது குதிரை முகம் தெரியாமல் நிலத்தடியால்

கீரிமலை தீர்த்தக் கேணியில் நீராடி சிவனைத்  வணங்கி வந்ததாக தமது மூதாதையர்கள் தெரிவித்ததாக அயல் கிராமங்களில் வாழும்  மக்கள் தெரிவித்தனர்.

இந்துசமய தொல்பொருள் அடையாளச் சின்னமாகக் கருதப்படும் குறித்த கற் குகையினை தற்போது தனியார் ஒருவர் தனது காணி எனச் சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஆகவே பொறுப்பு வாய்ந்தவர்கள் தமிழ் மக்களுடைய வரலாற்று சின்னமாக விளங்குகின்ற குறித்த கற்குகையினை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு எமது வரலாறுகளை கொண்டு செல்வதற்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews