விக்னேஸ்வரன் அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!சிறீகாந்தா.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோமெனவும் அதன் பங்காளி கட்சியான தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே என்.ஸ்ரீகாந்தா இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடக சந்திப்பொன்றில் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றினால் அமைச்சரவையில் இணைவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசியத்தை வலியுறுத்துகின்ற தரப்புக்கள் சிங்கள-பௌத்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் இருப்பது என்பது நீண்ட காலமாக நிலவி வந்த ஒன்றாகும். அதற்கு விதிவிலக்காக செயற்பட்டவர்கள் தங்கள் சொந்த தொகுதியில் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததும் வரலாறு.
விக்னேஸ்வரன் குறிப்பிட்ட மூன்று நிபந்தனைகளை பொறுத்தவரை அது நியாயமானது. ஆனால் அதனை நிறைவேற்றினால் அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்பது பாரதூரமான ஒன்றாகும். அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் தனது கருத்தை மாற்றிக் கொள்வார் என நான் நம்புகிறேன். இந்தக் கருத்து இனி சிந்தனையில் கூட எழக்கூடாது. அந்த சிந்தனை மீண்டும் உருவானால் நாங்களும் விக்னேஸ்வரன் அவர்களும் ஒருபோதும் அரசியலில் ஒன்றாக பயணிக்க முடியாது என்பதை தயக்கமின்றி சொல்வேன்.
அவரை அவரது வழியில் விட்டு எங்கள் பயணத்தை நாம் தொடர்வோம்.

இது தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாக தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். விக்னேஸ்வரன் தொடர்பில் விமர்சனத்தை முன்வைக்க கஜேந்திரகுமாருக்கோ அல்லது ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கோ முழு உரிமை உண்டு ஆனால் அது நாகரீகமானதாக இருக்க வேண்டும்.

தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் மூன்று பிரிவாக பிரிந்து இருந்தாலும் கூட நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. நாங்கள் ஒன்றாக சேராவிட்டாலும் கூட ஒரு சில விடயங்களிலாவது ஒரே நிலைப்பாட்டில் இருப்பது அவசியமாகும். ஆனால் இவ்வாறான கடுமையான விமர்சனங்கள் அதனை பாதிக்கும்.

விக்னேஸ்வரனின் தோற்றப் பொலிவை வைத்து பொட்டு தாடி என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள அரசியல் விமர்சனம் என்பது மிகவும் அநாகரிகமானது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரன் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட காலத்திலும் விக்னேஸ்வரனின் தலைமையை ஏற்க தயார் என கஜேந்திரகுமாரும் அவரது தோழர்களும் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் கஜேந்திரகுமாரின் கண்ணுக்கு விக்னேஸ்வரனின் பொட்டும் தாடியும் புலப்படவில்லையா என்ற கேள்வி எழுகிறது.ஆனால் சக தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை இவ்வாறு குறிவைத்து தாக்குவதற்கு கஜேந்திரகுமாருக்கு வாக்களித்த மக்களே எவ்வாறு
ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

தமிழ் பண்பாட்டையும் இந்து கலாசாரத்தையும் பேணும் விக்னேஸ்வரனுக்கு அதனை பின்பற்ற முழு உரித்துண்டு.இவ்வாறான நிலையில் நாங்களும் இதே பாணியில் பதில் அளித்தால் தமிழ்த்தேசிய அரசியலில் அனர்த்தமான ஒரு நிலை உருவாகிவிடும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews