வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பான கலந்துரையாடல்….!

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பிலான விசேட முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுடைய தலைமையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வுகள் எதிர்வரும் 30.05.2022 அன்று பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகி 06.06.2022 அன்று தீர்த்தம் எடுத்தல் நிகழ்வும் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து 12.06.2022 அன்று காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று 13.06.2022 அன்று காலை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உடைய பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

இந்த பொங்கல் நிகழ்வு தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஆலய உற்சவத்துடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு தாக்குதல் காரணமாகவும் 2020ஆம், 2021ஆம் ஆண்டுகளில் கோவிட் காரணமாகவும் ஆலய உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இடம்பெற்ற நிலையில், இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த உற்சவத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆலயத்திற்கு வருகின்ற வீதிகள் ஆலயத்தில் குடிநீர் மலசலக்கூட வசதிகள், சுகாதார வசதிகள், பாதுகாப்பு, போக்குவரத்து, மின்சார வசதிகள் என அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளுடனும் இந்தக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறு ஒவ்வொரு துறை சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், ஆலய உற்சவத்திற்கு ஏற்பாடுகளை அனைத்து தரப்பினரும் செய்வதாக உறுதியளித்துள்ளனர். மேலும் இந்த முன்னேற்பாடுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 03.06.2022 திகதி காலை 10.30 மணிக்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெறும் எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர்கள், பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலாளர், திணைக்கள தலைவர்கள் ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

அத்தோடு இந்த ஆலயத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அடுத்த கூட்டத்தில் தெரியப்படுத்தப்படும் எனவும் ஆலயத்தில் பக்தர்கள் வருவதற்கு இம்முறை எந்தத் தடைகளும் இல்லாத நிலையில், ஆலயத்தில் விசேடமான பொங்கல் வழிபாடுகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் ஆலயத்தில் பக்தர்களுடைய நேத்திக் கடன்களைச் செய்யக்கூடிய வகையிலே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews