நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கிகரிக்கப்படும் – வேழமாலிகிதன்.

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற அடிப்படை நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கிகரிக்கப்படும் என்பது நம்பிக்கை என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.

கிளிநொச்சி சேவைச்சந்தையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ம் ஆண்டு இந்த மண்ணிலே மெற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்ச நாளாகிய மே 18 நினைவு நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு ஆயத்தமாகி வருகின்ற இந்த வேளை, எமது உயிரோடும் உள்ளத்தோடும் இணைந்துள்ள இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வு மிக முக்கியமானது.

இந்த கஞ்சியின் பின்னால் இருக்கக்கூடிய உணர்வுகளையும் வலிகளையும் இந்த இடத்தில் பேசுவது மிக முக்கியமானது. 2009ம் ஆண்டு இதே காலப்பகுதியில் எங்களுடைய மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நாங்கள் நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.
கையெது மெய்யெது என்று தெரியாத சதை குவியலுக்குள்ளே எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று ஒவ்வொரு பிணங்களாக பிரட்டி பார்த்ததை நாங்கள் நினைத்து பார்க்கின்றோம்.
போர் பாதுகாப்பு வலயங்கள் என சொல்லி அங்கு போகவிட்டு பல்குழல் ஏவுகணைகளாலே தாக்கி, எங்களுடைய உடல்களை சிதைத்து, வெறும் பக்கோ இயந்திரங்களால் வெட்டி புதைத்த காலங்களை நினைத்து பார்க்கின்றோம்.
இரசாயன குண்டுகளையும், கொத்து குண்டுகளையும் பாவித்து எங்களுடைய இனத்தை அழிப்பு செய்த நாட்களை நினைத்து பார்க்கின்றோம். அந்த காலக்கட்டத்தில் உணவின்றி கஞ்சி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அந்த இடத்திலே கஞ்சிக்காக எங்களுடைய பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் செல்களினாலே துவம்சம் செய்யப்பட்ட அந்த நாட்களை நினைத்துப்பார்க்கின்றோம்.
வெறும் தரப்பால் கொட்டில்களாக இருந்த அந்த இடங்களிலே ஒவ்வொருநாளும் செத்து செத்து மலையாக குவிந்துகொண்டிருந்த பிணங்களினுடைய முகங்களை நாங்கள் நினைத்து பார்க்கின்றோம்.
எனது அப்பாவை, கணவனை, பிள்ளைகளை என்று சொல்லி ஒவ்வொரு மலர்ந்திருக்கும் முகங்களையும் புதைத்துவிட்டு வெளியேறிய அந்த கணப்பொழுதுகளை நினைத்துப்பார்க்கின்ற அந்த பொழுதிலேதான் இந்த கஞ்சி எங்களோடு சேர்ந்திருக்கின்றது.
இந்த கஞ்சிக்கு பின்னால் எங்களுடைய பசி இருந்திருக்கின்றது, வலி இருந்திருக்கின்றது, போராட்ட உணர்வு இருந்திருக்கின்றது, எங்களுடைய அர்த்தமுள்ள அரசியல் அபிலாசை இருந்திருக்கின்றது. இத்தனையாயிரம் மக்களுடைய விடுதலைக்ககாக அந்த மண்ணிலே தங்களுடைய உயிர்களை ஈந்துபோன நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது எண்ணமும், கனவும் இந்த கஞ்சியிலே இருக்கின்றது.
நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அந்த மண்ணிலே வாழ்ந்துகொண்டிருந்தபொழுது, வெறும் 65ஆயிரம் மக்கள்தான் வாழ்கின்றார்கள் என்று சொல்லி பொருளாதார தடையை விதித்து உணவு பஞ்சத்தை ஏற்படுத்தி அந்த அந்த மக்களை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்த அந்த தருணத்தில்தான்  தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அந்த கஞ்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி பசியாற்றியிருந்தது.
அதன் காரணமாக படுகொலைக்கு உயிர்தப்பிய பலர் பசியிலிருந்து தப்புவதற்கான சூழலை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஏற்படுத்தியிருந்தது. அதனை இன்று நாங்கள் நன்றியோடு நினைவுகூர வேண்டும்.
ஒரு இனத்தினுடைய விடுதலையிலே, போராட்டத்தின் சக்தியாக இருப்பது பட்டினி கிடத்து இந்த இனத்தின் விடுதலைக்காக உயிரை அர்ப்பணம் செய்வது. அந்த உன்னத தியாகத்தை இந்த மண் செய்திருக்கின்றது.
அந்த காலத்திலே கஞ்சிக்காக தாய் நின்றபொழுது, களத்தில் நின்ற பிள்ளை இன்று இல்லை. தங்கள் பிள்ளைகளிற்கு கஞ்சி வாங்கி ஊட்டிவிட வேண்டும் என்பதற்காக அந்த மண்ணிலே மனைவி நின்றபொழுது அந்த கணவர் இன்று இல்லை. அந்த கணவனும் மனைவியும் களத்திலே நின்றபொழுது அந்த கஞ்சிக்காக நின்ற பிள்ளைகள் இன்று இல்லை.
அத்தனை துயரத்தை இந்த அரசு ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை இந்த மண்ணிலே அரங்கேற்றி, அதன் உச்சத்தை முள்ளிவாய்க்கால் தொட்டிருக்கின்றது. உலக வரலாற்றில் என்றும் பதிந்திருக்கப்படமுடியாத மிகக் கொடூரமான இனப்படுகொலையை இந்த மண்ணில் நிகழ்த்தியதன் சாட்சியாக எங்களுடைய உணர்வுகளோடு, உள்ளத்தோடு பின்னி நிக்கின்ற ஒரு பொருளாக இந்த கஞ்சி இருக்கின்றது.
இந்த கஞ்சி எங்களுடைய எதிர்கால சந்ததியிடம் கொண்டு செல்லப்படும். எங்களுடைய மண்ணிலே மலர்கின்ற ஒவ்வொரு குழந்தையும் இந்த கஞ்சியினுடைய உணர்வையும், மகிமையையும் புரிந்துகொண்டு சக்தியுள்ள அரசியல் விடுதலையை பெற்றெடுப்பதற்கான உறுதியை இந்த கஞ்சி அளிக்கும்.
இந்த கஞ்சியினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வழங்குவதையிட்டு நாங்கள் நிறைவடைகின்றோம். இந்த கஞ்சியினுடைய ஒவ்வொரு பருக்களும், ஒவ்வொரு துளியும், வியர்வையையும், இரத்தத்தையும் எங்களுடைய சந்ததியிடம் கடத்திச்செல்லும்.
இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற அடிப்படை நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கிகரிக்கப்படும் என்பது நம்பிக்கை என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews