கடன்களை செலுத்த முடியாது- அறிவித்தது இலங்கை!

வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய அனைத்து கடன் தொகைகளையும் தற்காலிமாக செலுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க நேற்று தெரிவித்தார்.

“வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை செலுத்துவது சவாலானது மற்றும் சாத்தியமற்றது என்ற நிலைக்கு வந்துள்ளோம். கடனை மறுசீரமைப்பதும் – திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதும் தான் எடுக்கக்கூடிய சிறந்த நடவடிக்கையாகும்.

“நாட்டில் தற்போது வெளிநாட்டுக்கு கையிருப்பு மிகவும் குறைவாகக் காணப்படுவதால், எரிபொருள், மருந்து பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில், அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளோம்.

“எமது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த மார்ச்சில் 193 கோடி அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்த ஆண்டு ஜூலையில் 400 கோடி டொலர்கள் வெளிநாட்டுக் கடனை செலுத்தவேண்டியுள்ளது.

22 மில்லியன் மக்கள் வசிக்கும் எமது நாடு ஒருபோதும் கடனை செலுத்துவதிலிருந்து தவறியதில்லை. இந்த நிலையை முன்னிலைப்படுத்தி கடன் செலுத்தாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. நாம் அத்தியாவசிய இறக்குமதிகளில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டுக் கடனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை – என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்த ஆண்டில் இலங்கை 700 கோடி டொலர் கடனை திருப்பிச் செலுத்தவேண்டும். இதில் 300 கோடி டொலர்கள் பற்றாக்குறையாக இருக்கும் என்று பொருளியலாளர்கள் குழு ஒன்று கணித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews