புதிய அரசமைப்பு தொடர்பில் கவனமாக இருங்கள் – கூட்டமைப்புக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!

புதிய அரசமைப்பு விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும் – எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்”, என்று தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.

மேலும், “13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிய 6 தமிழ்த் தேசியக் கட்சிகளின் விடயத்தையும் இந்தியா அங்கீகரிக்க வேண்டும்” என்று இதன்போது செல்வம் அடைக்கலநாதன் எம். பி. வலியுறுத்தினார் என்றும் ஈழநாடுவுக்கு அறியவந்தது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று சந்தித்தபோதே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்திருந்தது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பங்காளிக் கட்சிகளான புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய தரப்பில் வெளிவிவகார அமைச்சருடன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, அரசியல் விவகாரங்களுக்கான செயலர் பானு ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கேட்டார்.

சந்திப்பு விடயங்களை விளக்கிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் 13ஆவது திருத்தத்தைக்கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அரச தரப்பு பின்னடிக்கிறது என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், சுமந்திரனை அது தொடர்பில் விளக்கமளிக்குமாறும் கூறினார்.

ஜனாதிபதியுடனான பேச்சின் அடிப்படை அம்சங்களான வடக்கு, கிழக்கு காணிகள் அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசமைப்பு மூலமான தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் விவகாரம், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் என 5 விடயங்களையும் விவரித்தார்.

இதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், “புதிய அரசமைப்பு விடயத்தில் கவனமாக இருங்கள். அதற்காகக் காத்திருக்காதீர்கள். அது முன்னரைப்போன்று இல்லாமலும்கூட இருக்கலாம். அத்துடன், புதிய அரசமைப்பு மூலம் தீர்வு காண முடியாத சூழல் கூட உருவாகலாம்”, என்று அறிவுறுத்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சித்தார்த்தன் எம். பி., “புதிய அரசமைப்பு உருவாகும் என்று நம்பவில்லை. அப்படியே வந்தாலும் அது பழையதை விட மோசமாகவே இருக்கும். ஆனால், அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு விடயங்கள் சாத்தியமாகும் என்று நம்புகிறோம். இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விடயங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்”, என்றார்.

“இதுவே சரியான முறைமை”, என்று கூறி ஜெய்சங்கர் அதை ஆமோதித்தார்.

தொடர்ந்து செல்வம் அடைக்கலநாதன் எம். பி.“13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிய 6 தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இந்தியா அங்கீகரிக்க வேண்டும். இது தொடர்பாக இந்தியா இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனவே, இதற்கு தகுந்த பதிலை வழங்கி ஆறு கட்சிகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் பட்சத்திலேயே, அவை தொடர்ச்சியாக ஒற்றுமையாக பயணிக்க முடியும் – இது தொடர்பில் அரசாங்கத்துக்கும் அழுத்தம் உருவாகும்”, என்று கூறினார்.

“இந்த விடயத்தில் அவதானம் செலுத்தப்படும்”, என்று ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews