விடுதலை பெறமுடியாத நிலையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது – வேழமாலிகிதன்.

இளைஞனாக சிறைக்குள் சென்று முதிர்ச்சியடையும் வயதிலும் கிளிநொச்சி ஆனைவிழுந்தானை சேர்ந்த சிவலிங்கம் விடுதலை பெற முடியாத நிலையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“1979 களில் பயங்கரவாத குழுக்களை அழிப்பதற்கென்று சொல்லி பயங்கரவாத தடுப்பு சட்டம் இந்த மண்ணில் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டபொழுது விடுதலை இயக்கங்களிற்கு எதிரானதாக வெளிக்காட்டப்பட்டது.

ஆனால் அது உருவாக்கப்பட்ட பொழுதே, இவ்வாறு நீண்டகால திட்டம் ஒன்றினால் தமிழ் மக்களையும், அவர்களது தேசிய உணர்வையும் ஒடுக்குவதற்கு அது பயன்படுத்த முடியும் என்ற சகல மூலோபாயங்களையும் அந்த சட்டம் கொண்டிருக்கின்றது.

அந்த சட்டம் கொண்டு வரப்பட்டு அதன் நோக்கம் நிறைவு செய்யப்பட்டதாக இந்த அரசாங்கம் அறிவித்தாலும், அந்த சட்டம் இன்று 12 ஆண்டுகளாக தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமையை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

இந்த 12 ஆண்டு காலமும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய விடயங்கள் எதுவும் இல்லாதபொழுதும், சாதாரண சிவில் சமூகத்தினரையும், ஊடகவியலாளர்களையும், இளைஞர்களையும், அரசியல் ரீதியாக கோரிக்கைகளை முன்வைப்பவர்களையும் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் உபாயமாக பயங்கரவாத தடுப்பு சட்டம் இந்த மண்ணிலே இருந்து கொண்டிருக்கின்றது.

கடந்த 17 வருடங்களாக சிறையில் இருக்கின்ற கிளிநொச்சி ஆனைவிழுந்தானை சேர்ந்த சிவலிங்கம் என்பவர், நேற்று முந்தினம் பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள சிறைச்சாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றார். உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று சொன்னார்கள்.

இளைஞனாக சிறைக்குள் சென்ற அவர், தனது முதுமை நெருங்கிய இந்த காலத்திலேயே பாரிசவாதத்தினால் முடக்கப்பட்டுள்ளபோதிலும் அவர் சிறைக்குள் வைத்திருக்கப்பட்டுள்ளார். இவ்வாறான கொடூரமான சட்டத்தின் கீழ்தான் எமது இனம் அடக்கி ஆளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த சட்டத்தை இல்லாது செய்வதன் ஊடாக எதிர்கால் இளைய சந்ததி இந்த மண்ணிலே நிம்மதியாக வாழ்வதற்கான வழியை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த சட்டத்தை வைத்துக்கொண்டுதான் பல காரியங்கள் நடாத்தப்படுகின்றது” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin