மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்…..!

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களினால் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைப்பதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி இன்று (04.03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட வனவளத் திணைக்களத்தின் காணி தொடர்பான பிரச்சினைகள் என்பவற்றுக்குத் துரிதமாகத் தீர்வு காணும் முகமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக வனவள பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்காவின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் என்பவற்றை வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவித்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்துடன் நீண்டகாலமாக வனவளத்தினால் விடுவிக்கப்படாமல் இருந்த மக்களது காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், உடனடியாக தீர்க்கப்படக் கூடிய பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது.

மேலும் ஏனைய வனவள திணைக்களத்துடன் தொடர்புடைய காணிப் பிரச்சனைகளை 2 மாத காலத்திற்குள் தீர்வு காண்பதற்கான படிமுறை ஒன்றும் உருவாக்கப்பட்டது.

வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரனவின் பங்கேற்புடன்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், இரு மாவட்டங்களின் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், வனவளத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin