உக்ரைன் போர் தமிழ்த்தரப்பிற்கு பல வெளிகளைத் திறக்கும் சி.அ.யோதிலிங்கம்.

ஜெனிவா திருவிழா ஆரம்பித்து விட்டது.  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் மிச்செல்பச்லெட்             அம்மையார் சற்று காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  தமிழ் மக்கள் பற்றிய விவகாரமாக ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா திருவிழா இன்று இலங்கைத்தீவின் பொது விழாவாக பாரிணாமம் பெற்று விட்டது. இன்னோர் வகையில் சொல்வதாயின் சர்வதேச ஆதிக்க சக்திகள் இலங்கைத்தீவு தொடர்பாக தங்களின் இலக்கிற்கேற்ற திருவிழாவாக மாற்றி விட்டனர். இலங்கையின் ஏனைய விவகாரங்களை பெருப்பித்துக்காட்டி தமிழர் விவகாரத்தை சிறுக்க வைத்து விட்டார்கள்.  இதை இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் போர்க்குற்ற விவகாரம் மனித உரிமை விவகாரமாக சுருங்கி விட்டது.
இந்த விவகாரத்தில் அமெரிக்க – இந்திய – மேற்குலக கூட்டின் இலக்கு ஆட்சி மாற்றம் தான். கொரோனாவைத் தொடர்ந்து நெருக்கடிகளினாலும், கோத்தா அரசாங்கத்தின் சீனச் சார்புக் கொள்கைளினாலும் இலங்கை முன்னெப்போதும் கண்டிராத நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.  அந்த நெருக்கடிகள் தற்போதைக்கு குறையக் கூடிய சாத்தியங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. உக்ரைன் விவகாரம் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. தற்போது இலங்கையின் நிலை அன்றாடம் காய்ச்சி நிலை தான் . அன்றாடம் காய்ச்சியாவது உழைத்த பணத்தில் நாட்களை கழிப்பான் ஆனால் இலங்கையோ இந்தியக் கடனில் நாட்களைக் கழிக்கின்றது. இந்தியாவும் சீனா பக்கம் சாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் கேட்ட கடன்களையெல்லாம் கொடுத்து வருகின்றது. ரவுடிக்குப் பயந்து கடைக்காரன் கப்பம் கொடுப்பது போல எனினும் இன்னோர் பக்கத்தில் ரவுடிகளின் ஆயுதங்கள் பறிக்க கூட்டாக முனைகின்றது.
இலங்கையின் இந்த நெருக்கடி நிலை ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புக்களை சற்று அகல திறந்து விட்டுள்ளது. சிங்கள மக்கள் முன்னெப்போதையும் விட ஆட்சியாளர்கள் மீது கடும் அதிர்ப்தியில் இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் 2ஃ3 பெரும்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றது. தென்னிலங்கையின் சிவில் முக்கியஸ்தர்கள் ஆட்சிமாற்றத்திற்குரிய  கருமங்களை ஆரம்பித்து விட்டனர். அரசு சார்பற்ற நிறுவனங்கள் தொடக்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வரை எவரும் இதற்கு விதிவிலக்காக இல்லை. இந்த ஆட்சி மாற்றக்காரர்கள் தமிழ்த்தேசத்திலும் குடை விரிக்கத்தயங்கவில்லை இச் செயற்பாட்டில் அமெரிக்க – இந்திய – மேற்குலகக் கூட்டினர் தம் பங்கிற்கு தம் பணியையும் ஆற்றத் தொடங்கியுள்ளனர். அந்தப் பணிகளிலும் மிகுந்த கவனம் பெருந்தேசிய வாதிகள் தமது செயற்பாடுகளை பயன்படுத்தக் கூடாது என்பதில் தான். மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கை வெளிப்பாடு அவரது அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது. போர்க்குற்ற விவகாரம் மனித உரிமை விவகாரமாக சுருங்கிய கதை இது தான். அமெரிக்க – இந்திய – மேற்குலகக் கூட்டின் கோரப்பசிக்கு இலங்கைத்தீவு முழுவதும் தேவை. தமிழர்கள் அவ்வப்போது கறிவேப்பிலை தான.; கறிக்கு கொஞ்ச மணமும் தேவை தானே. தமிழர் விவகாரத்தை ஓரத்திலாவது சேர்க்காவி;ட்டால் கறியின் வாசம் குறைந்து வி;டும்.
உக்ரைனில் போர் ஒரு வாரத்தைக் கடக்கப் போகின்றது. 1000 பொதுமக்கள் கூட இறக்கவில்லை ஆனால் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வரிந்து கட்டிக் கொண்டு மேற்குலக நாடுகள் முறையிட்டு விசாரணையைத் தொடக்கியுள்ளன. இன அழிப்பும் குற்றங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மக்கள் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் படி 40,000 பேர்வரை இறந்தும் (மறைந்த மன்னார் ஆயரின் இராயப்பு யோசிப்பின் அறிக்கைப்படி 1,46,000) விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையைத் தாண்டவில்லை. அமெரிக்க மேற்குலகக் கூட்டு உக்ரேனியர்களுக்கு ஒரு நீதியையும் தமிழர்களுக்கு இன்னோர் நீதியையும் வழங்குகின்றதா? மேற்குலக ஜனநாயகம் வழங்கும் நீதி இது தானா? உக்ரேனிய அதிபர் இளவயதுக்காரர்களின் வெளியேற்றத்தை தடுக்கின்றார். சிறுவர்களுக்கு  ஆயுதங்களை வழங்குகின்றார் மேற்குலக கண்களுக்கு இவையெல்லாம் தெரியவில்லை. கிட்டப்பார்வை அவற்றிற்கு மந்தமாக இருக்கலாம.; சர்வதேச நீதி என்பது மேற்குலக நலன்களின் நீதிதான்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் மிச்செல் பச்லெட் அம்மையார் மனித உரிமைகள் வழக்குகளில் பின்னடைவு, சிறுபான்மையினர் ஒடுக்கப்படுதல், புதிய அரசியல் யாப்பும் அதிகாரப்பரவலாக்கலும தண்டனைகளிலிருந்து விலக்கீடு, வெளிப்படையாக மேலோங்கும் சிங்கள பௌத்த தேசியவாதம் சிவில் செயற்பாடுகளில் இராணுவம், காணாமல் போனோர் விவகாரம், பயங்கரவாதடைச்சட்டம் , பொறுப்புக்கூறல் , நல்லிணக்கம் என பல விடங்களைக் கூறியிருக்கிறார்.
இவற்றில் பொறுப்புக் கூறல், நல்லிணக்கம், அதிகாரப்பரவலாக்கம் என்பவையே நேரடியாக தமிழர்களை மையப்படுத்தியவை. மேலோங்கும் சிங்கள பௌத்த தேசிய வாதம், பயங்கரவாதத் தடைச்சட்டம், தண்டனை விலக்கீடு சிறுபான்மையினர் ஒடுக்கப்படுதல் என்பன அண்மைக்காலமாக முஸ்லீம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் எதிரான செயற்பாட்டின் வெளிப்பாடுகளே. ஏனைய விவகாரங்களோடு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடித்தளமான பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பன பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது அல்லது பத்தில் ஒன்றாக வந்துள்ளது. போர்க்குற்ற விவகாரம் சிறிதாக்கப்பட்டு மனித உரிமை விவகாரம் பெரிதாக்கப்பட்டுள்ளது. கடுமையான அழுத்தங்கள் பெரிதாக இல்லை முன்னர் மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் போர்க்குற்ற விவகாரம் செல்ல வேண்டும். நாடுகள் தங்களது நீதி முறைமைக்கு ஏற்ப விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என சற்று கடுமையான அழுத்தங்கள் இருந்தது. இந்தத் தடவை அவை எவற்றையும் காணோம். பெருந்தேசியவாதத்தை உசுப்பேத்தி ஆட்சிமாற்றத்தை சிதைக்கக் கூடாது என்பதில் அம்மையாரும் கவனமாக இருக்கின்றார் போலவே தெரிகின்றது.
தமிழ்த்தரப்பு தமது ஒற்றுமையின் சீத்துவத்தை சர்வதேச மயப்படுத்த மூன்று தமிழ்த்தேசிய அணிகளும் மூன்று கடிதங்களை மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகருக்கு  அனுப்பியுள்ளன. இக்கடிதங்களின் உள்ளடக்கத்தில் பெரிய வேறுபாடுகளோ, கொள்கை முரண்பாடுகளோ, இருக்கவில்லை அவ்வாறாயின் ஏன் தனித்தனிக்கடிதங்கள். காணிப்பறிப்புக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஒன்றாகக் குந்தியவர்கள் இங்கு மட்டும் கன்னை பிரித்து செயற்படுவதேன்? அரசியல் தவிர வேறொன்றுமில்லை அதுவும் மீன் அணியும், சைக்கிள் அணியும் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் அதுவும் ஜ.நா. மனித உரிமை பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கை வெளிவந்த பின்னர் தான் கடிதங்களை அனுப்பியுள்ளன. உயர்ஸ்தானிகர் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர் அல்லவா அனுப்பியிருக்க வேண்டும். வாக்கு அரசியல் தவிர இதன் நோக்கம் வேறு என்ன? இந்த இடத்தில் சம்பந்தனைப் பாராட்டலாம். அவர் பெப்ரவரியிலேயே கடிதத்தை அனுப்பியிருந்தார். அது கூட தாமதம் தான். அக் கடிதத்திற்கு முன்னரேயே உயர்ஸ்தானிகரின் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கும்.
இந்தத் தடவை ஜெனிவாத் திருவிழாவிற்கு நேரடிப் பயணத்தை தமிழ்க் கட்சிகள் எவையும் மேற்கொள்ளவில்லை. இதில் மட்டும் ஒற்றுமையை பகிரங்கப்படுத்தியுள்ளனர். பொது அமைப்புக்களிலிருந்தும், புலம்பெயர் அமைப்புக்களிலிருந்தும் கூட பெரிதாகச் செல்லவில்லை. அதேவேளை அரச பக்கத்தில் இருந்து வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலிசப்ரி உட்பட வலுவான குழுவினர் சென்றிருக்கின்றனர். இவர்களுடன் வெளிநாடு  வாழ் இலங்கையர்களும் இணைந்திருக்கின்றனர். இரு தரப்பும் இணைந்து திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. அதை முறியடிக்கக் கூடிய வகையில் தமிழ்த் தரப்பிடமிருந்து பெரிதாக எதுவும் நடக்கவில்லை.
ஜெனிவா களைப்பு வந்துவிட்டதோ தெரியாது. ஓன்றை அளவுக்கதிகமாக நம்புவதும் அது பொய்க்கின்ற போது விரக்தியில் முழுமையாகக் கைவிடுவதும் தமிழ் அரசியலின் மரபு ரீதியான அணுகுமுறை. இந்த மரபு ஆரோக்கியமானதல்ல. அதனை அதுவாகவே மதிப்பிட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதே புத்திசாலித்தனமானதாகும். இந்த விவகாரத்தில் பின்பற்ற வேண்டியதான மந்திரம் “நம்பவும் வேண்டாம் விலகவும் வேண்டாம்” என்பதே
ஜெனிவா தொடர்பாக பல விமர்சனங்கள் இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சர்வதேச அரசியல் களம். இந்த அரசியல் களம் தமிழர் விவாகரத்தை தொடர்நிலையில் பேசுபொருளாக வைத்திருப்பதற்கு உதவுகின்றது. ஒரே நேரத்தில் சர்வதேச நாடுகள், ஊடகத்துறை, அரசுசார்பற்ற அமைப்புகள் என்பவற்றுடன் தொடர்புகொள்ள முடிகின்றது. கூட்டத்தொடர் காலத்தில் உலகின் கவனம் ஜெனிவாவில் குவிவதால் சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்க முடிகின்றது.
ஜெனிவாவில் செல்வாக்கு செலுத்தும் அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் இலங்கை அரசிற்கு வன்மையாக அழுத்தங்களைக் கொடுக்க பின்னின்றாலும் கோவையை மூடிவிடுவதற்கு தயாராக இல்லை. இது தமிழ்த்தரப்பிற்கு சாதகமான அம்சம். கோவை மூடாமல் இருப்பது சர்வதேச மட்டத்தில் தொடர் பேசுபொருளாக வைத்திருப்பதற்கு வாய்ப்புக்களைக் கொடுக்கும்.
தற்போது உக்ரைன் விவகாரம் இரண்டு வாய்ப்புக்களை திறந்துவிட்டுள்ளது. ஒன்று உக்ரைன் விவகாரம் முன்னரும்; கூறியதுபோல சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு விசாரணையும் ஆரம்பமாகியுள்ளது. 30க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டு முறைப்பாட்டை வழங்கியுள்ளன. இன அழிப்புக் குற்றமும் சார்த்தப்பட்டுள்ளது. எனவே தமிழ்த் தரப்பும் உக்ரைனுக்கு ஒரு நீதி, தமிழ் மக்களுக்கு ஒரு நீதி என்ற கேள்வியை எழுப்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது சோவியத் யூனியன் கால பனிப்போர் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. மாற்று அணியில் பொருளாதார வல்லரசான சீனாவும், தொழில்நுட்ப வல்லரசான ரஸ்யாவும் ஒன்றிணைந்துள்ளன. இவற்றுடன் ஈரான், சிரியா, வடகொரியா என்பனவும் இணையும். இந்தியா மதில்மேல் பூனையாக பனிப்போர்கால அணிசேராக்கொள்கையை பின்பற்ற முயற்சிகின்றது. சீனா தாய்வான் மீது படையெடுப்பை நடாத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
இப் புதிய பனிப்போர் சூழல் தமிழ் அரசியலுக்கு வாய்ப்பானது. முன்னைய பனிப்போர் காலமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பான காலங்களாகவே இருந்தன. ஒரு தரப்பு அரசிற்கு ஆதரவளித்தால் மறுதரப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவே இருப்பதே இதற்குக் காரணமாகும். இந்தியா தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவளித்த காலமும் பனிப்போர் காலம் தான்.
என்னதான் சாதகமான சூழல்கள் வந்தாலும் அதனைப் பயன்படுத்துவதற்கு தமிழ்த் தரப்பு தயாராக இருக்க வேண்டும். அதற்கான அறிகுறிகள் கொஞ்சமும் தெரியவில்லை.
தமிழ் மக்களைப் பீடித்த சோகம் இதுதான்!

Recommended For You

About the Author: admin