சுதந்திரம்! தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரம்…… சி.அ.யோதிலிங்கம்.

சிறீலங்காவின் 74 வது சுதந்திர தினம் கடந்த 4.02.2022  வெள்ளியன்று
முப்படைகளின் அணிவகுப்புடன் சிங்கள தேசத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
சிங்கள தேசம் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியான தினமாக அனுஸ்டித்த போது
தமிழ் மக்கள் கரி நாளாக அனுஸ்டித்தனர். இலங்கைத் தீவு சமூகமளவில்
இரண்டாக இருப்பதை சுதந்திரதினம் துலாம்பாரமாக வெளிப்படுத்தியது.
தமிழ் மக்கள் அனுஸ்டித்த துக்க தினத்தையும் தமிழ்த்தேசிய கட்சிகள்
ஏற்பாடு செய்யவில்லை. அவை அக்கறையற்று இருந்த போது சிவில்
அமைப்புக்களே ஏற்பாடு செய்தன. இது பிரக்ஞை பூர்வ தமிழ்த்தேசிய
அரசியல் தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து சிவில் அமைப்புகளிடம்
கைமாறுகிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இனப் பிரச்சினை என்பதே இன அழிப்பின் விளைவுதான். அதன்
உச்சம் உயிர் அழிப்பே! இந்த துக்க தினமும் தமிழ் மக்கள் கொத்துக்
கொத்தாக கொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே இடம்
பெற்றது. எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலின் திறவுகோல்
முள்ளிவாய்க்கால் தான் என்பதை இது நினைவுபடுத்தியது. துக்கத்தைக் குறிக்கும்
நிலையில் கறுப்புப் பட்டி அணிந்தே மக்கள் நிகழ்வில்
பங்குபற்றினர்.  இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக மீனவர்களின்
போராட்டம் குடாநாடெங்கும் விஸ்தரிக்கப்பட்ட நிலையிலும் மக்கள் துக்க
தினத்தில் திரளாக கலந்துகொண்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
வரலாறு என்பதே தமிழ் மக்களை அரச அதிகாரக்கட்டமைப்பிலிருந்து தூக்கி வீசிய வரலாறாக மாறியது. சுதந்திர தினத்துக்கு முன்னரே தமிழ் மக்களை ஒடுக்குவது தொடர்பாக
இரண்டு அணுகுமுறைகளை சிங்கள ஆட்சியாளர்கள் பின்பற்றினர். ஒன்று
அரச அதிகாரக் கட்டமைப்பை சிங்கள பௌத்த மயமாக்குவது. இரண்டாவது தமிழ்
மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிப்பது. இந்த இரண்டு அணுகுமுறைகளும்
வரலாறு முழுவதும் பின்பற்றப்பட்டன.
1931இல் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் யாப்பு
அரைப் பொறுப்பாட்சியை சிங்கள தரப்பிற்கு வழங்கியது. இதனை அரை
அனுமதிப்பத்திரம் அதாவது அரை லைசன்ஸ் எனக் கூறலாம். இதனைப்
பயன்படுத்தி ஒரு பக்கத்தில் அரச அதிகாரக் கட்டமைப்பை சிங்கள பௌத்த
மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதோடு மறுபக்கத்தில் ஒரு தேசமாக
இருப்பதை அழிக்கத் தொடங்கினர். தேசமாக இருப்பதை அழிப்பது என்பது
தேசத்தைத் தாங்குகின்ற தூண்களாக இருக்கின்ற நிலம் மொழி
பொருளாதாரம் கலாசாரம் என்பவற்றை அழிப்பதுதான். சிங்கள
பெரும் தேசியவாதிகள் முதலில் கைவைத்தது தமிழ் மக்களின் நிலத்தில் தான்.
டொனமூர் காலத்தில் விவசாய அமைச்சராக இருந்த
டி.எஸ்.சேனநாயக்காவினால் மட்டக்களப்பு தெற்கு என அழைக்கப்பட்ட
தற்போதைய அம்பாறை மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்டது..
கல்லோயாத் திட்டம் என்ற பெயரில் சிங்கள விவசாயக்
குடியேற்றம் உருவாக்கப்பட்டது. தென் மாகாணத்திலிருந்து குடியேறிகள்
இதற்காகக் கொண்டுவரப்பட்டனர். பட்டிப்பளை ஆறு என அழைக்கப்பட்ட
தமிழ்பேசும் மக்களின் மரபுரிமைச் சொத்தான ஆற்றை மறித்து
சேனநாயக்கா சமுத்திரம் உருவாக்கப்பட்டது. இதனைச் சுற்றியே
குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத் திட்டத்தினூடாக 44
குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. இதில் 38 கிராமங்கள்
சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. 06 கிராமங்கள் மட்டும் தமிழ்
மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் வழங்கப்பட்டன. அந்த 06
கிராமங்களும் சிங்களக் கிராமங்களுக்கு அருகிலோ அல்லது
நீர்ப்பாசன வசதி அற்றதாகவோ இருந்தன. நாளடைவில் இக் கிராமங்களும்
சிங்கள மயமாகின.
இக் குடியேற்றங்களை மையமாக வைத்தே 1959ம் ஆண்டு சிங்கள மக்களை
மட்டும் கொண்ட அம்பாறை தேர்தல் தொகுதியும் தொடர்ந்து அம்பாறை
மாவட்டமும் உருவாக்கப்பட்டன. மாவட்டத்தின் தலைநகராக உண்மையில்
பாரம்பரியமாக அரசாங்க நிறுவனங்களைக் கொண்ட கல்முனை வந்திருக்க
வேண்டும். மாறாக குடியேற்றப் பிரதேசமான அம்பாறையே
தலைநகராக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் என்ற பெயர் தமிழ்ப் பெயராக
இருந்தமையினால் பின்னர் அது “திகாமடுல்ல” மாவட்டம் என சிங்களப்
பெயராக மாற்றப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் சிங்கள மக்களின்
எண்ணிக்கைகயை அதிகரிப்பதற்காக முன்னர் மொனராகலை மாவட்டத்துடன்
இணைந்திருந்த மாகாஓயா பதியத்தலாவை என்கின்ற இரு பிரதேச செயலாளர்
பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
இத் திட்டம் சுதந்திரத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டாலும்
சுதந்திரத்திற்குப் பின்னரே மக்கள் குடியேறத் தொடங்கினர்.
தொடர்ந்து தமிழர் தாயக நிலத் தொடர்ச்சியை சிதைக்க வேண்டும்
என்பதற்காக வடக்கு-கிழக்கின் மைய மாவட்டமான திருக்கோணமலை மாவட்டத்தில்
சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. திட்டமிட்ட விவசாயக்
குடியேற்றம் சட்டவிரோத விவசாயக் குடியேற்றம் மீனவர்
குடியேற்றம் வியாபாரக் குடியேற்றம் கைத்தொழில்
குடியேற்றம்ரூபவ் புனித பிரதேசக் குடியேற்றம் முப்படைப்
பண்ணைகளுக்கான குடியேற்றம் என அனைத்துவகை குடியேற்றத் திட்டங்களும்
திருக்கோணமலை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன.
திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம் தான் இவற்றில் பெரியவையாக
இருந்தன. மாவட்டத்தின் சனத்தொகையையும் நில உடமையையும
மாற்றியமைப்பதில் இதுதான் பெரும் பங்கு வகித்தது. அல்லைத்திட்டம்.
கந்தளாய்திட்டம். மொரவேவாத்திட்டம். மகாதிவுல்வெவத் திட்டம்.
பதவியாத்திட்டம். என்பவையே இவையாகும்.
திருக்கோணமலை மாவட்டத்தை ஒரு வில் போல வளைத்தே இவை
மேற்கொள்ளப்பட்டன. 1970 களில் இக் குடியேற்றங்களை மையமாக வைத்து
“சேருவல” சிங்களத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து சிங்கள
பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் இக் குடியேற்ற
முயற்சிகள் வவுனியா மன்னார் மாவட்டத்திலும் அரங்கேற்றப்பட்டன.
பாவற்குள குடியேற்றத் திட்டம் கொண்டச்சி குடியேற்றத் திட்டம் என்பன
இவ்வாறே உருவாக்கப்பட்டன. குடியேற்றப் பிரதேசங்களைப்
பலப்படுத்துவதற்காக வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலர்
பிரிவும் பிரதேச சபையும் உருவாக்கப்பட்டன.
தற்போது பெரும் தேசியவாதிகள் முழுக்கவனத்தையும்; முல்லைத்தீவு
மாவட்டத்திலும். வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிலும் குவிக்கத்
தொடங்கியுள்ளனர்.
வெலி ஓயா என்ற பெயரில் சிங்கள பிரதேச செயலர் பிரிவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிப்பறிப்பு
நடவடிக்கைகளில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை முன்னணியில்
நிற்கிறது.
மறுபக்கத்தில் 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம்
நிறைவேற்றப்பட்டது. இதனூடாக தமிழ்த் தேசத்தைத் தாங்கும் இன்னோர் தூண்
சரிக்கப்பட்டது. தமிழ் மக்களின் பொருளாதார ஆதாரம் என்பது நிலமும்
கடலும் தான் இவை இரண்டும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இன்னோர்
பக்கத்தில் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் கலாச்சாரத்தை அழிக்கும்
செயற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டன. யாழ் நூலக எரிப்பு  பௌத்த
விகாரைகள் உருவாக்கம் என்பன எல்லாம் கலாச்சார அழிப்புக்களே!
சுதந்திரம் வழங்கப்பட்டபோது தமிழ்த் தலைமைகள் தமது பேரம் பேசும்
பலத்தை உச்சமாகப் பயன்படுத்தியிருக்கலாம். தலைமைகள் அதில்
கோட்டைவிட்டன. அன்றைய தலைவராக இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமிழர்
தாயகத்தை வரையறுத்து சமஸ்டிக் கோரிக்கையை முன்வைப்பதற்கு பதிலாக
இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு சம
வாய்ப்புக்களைக் கோருகின்ற ஐம்பதுக்கு ஐம்பது (50; 50)
கோரிக்கையையே முன்வைத்தார்.
1920 களில் பண்டார நாயக்கா கண்டிய சிங்கள மக்களின் நலனில்
நின்றுகொண்டு சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். யாழ்ப்பாணத்திலும்
அது தொடர்பான கூட்டங்களை நடாத்தினார். தமிழ்த் தலைமைகள் அதற்கு
ஆதரவளிக்கவில்லை. டொனமூர் யாப்பின் ஆரம்ப வரைபின்போது மாகாண
சுயாட்சித் திட்டம் முன்வைக்கப்பட்டது. அதற்கும் ஆதரவு கொடுக்கவில்லை.
பெரும் தேசியவாதிகள் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு தமிழ்த்
தலைமைகளும் காரணமான இருந்துள்ளன. தூரநோக்கற்ற அவர்களின்
அரசியல் நிலைப்பாடுகளும் காரணம் எனலாம். டொனமூர் யாப்பு
நிறைவேறுவதற்கு கிழக்கின் பிரதிநிதி நு.சு தம்பிமுத்து காரணமாக
இருந்தார். சோல்பரி யாப்பு நிறைவேறுவதற்கு அருணாசலம் மகாதேவா
உட்பட பலர் காரணமாக இருந்தனர். சுதந்திரம் கிடைப்பதற்கு அமைச்சர்
பதவிகளை ஏற்றுக்கொண்ட சுந்தரலிங்கம். சிற்றம்பலம்நல்லையா.
என்போர் ஆதரவு வழங்கினர். 1972ம் ஆண்டு யாப்புக்கு தியாகராசா.
அருளம்பலம் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு வழங்கினர்.
தமிழ் அரசியலை கவிழ்த்து கொட்டுவதற்கும் தமிழ் அரசியலில் ஒரு
மரபுத் தொடர்ச்சி இருந்திருக்கிறது.
விதியே! விதியே! தமிழச் சாதியை என்ன செய்ய நினைத்தாய் என
ஒப்பாரி வைக்க வேண்டும் போல உள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews