இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் அறிவிப்பு: மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி…..?

இலங்கை அரசை கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர் வரும் 21ஆம் தேதி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து இன்று  முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும், 50க்கும் மேற்பட்ட மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சனை காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் பகுதியை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடி தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு சென்றதால் மீன்பிடி தொழிலாளர்கள் இன்றி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்சனை குறித்து நேற்று தங்கச்சிமடம் சூசையப்பர் கோயில் வளாகத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை வலியுறுத்தியும் வரும் 21ஆம் தேதி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இன்று  முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூட்டத்தில் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்.

மீனவர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்; கடற்கரையில்  நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களின் போராட்டங்கள் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீன் பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக வரும் 25 ஆம் தேதி இலங்கை செல்கிறார். அப்போது இலங்கை பிரதமர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews