தமிழ் அரசியல் தரப்புக்களுக்கும் – ஜனாதிபதிக்குமிடையில் மிக விரைவில் சந்திப்பு!அலி சப்ரி…..!

தமிழ் அரசியல்வாதிகள் கிடைக்காத ஒன்றை பெறுவதற்காக முயற்சிக்கிறார்கள். என கூறியுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, இந்த அரசியல்வாதிகளால் பல இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தை இழந்து நிற்கும் நிலையில் மேலும் இளைஞர், யுவதிகளை இவர்கள் துாண்டிவிடுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளைப் பிழையாக வழி நடத்துகிறார்கள்.

கிடைக்காது எனத் தெரிந்து கொண்டும் அதனைப் பெற முயற்சிக்கிறோம் என இளைஞர்களை மக்களைத் தூண்டி விடுகிறார்கள்.அது சாத்தியமல்லாத விடயம். எத்தனை இளைஞர் யுவதிகளை இவ்வாறான அரசியல்வாதிகளின் போராட்டத்தின் மூலம் இழந்து விட்டோம்.

எத்தனை இளைஞர் யுவதிகள் வடக்கில் தமது எதிர்காலத்தை இழந்து விட்டார்கள்.வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு நான் கூறிவைக்க விரும்புகின்றேன். உங்களைப் பிழையாக வழிநடத்தும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லாதீர்கள்.

உங்களுக்கு நல்ல சிறப்பான எதிர்காலம் உள்ளது. உங்களுக்கு முன்னால் உலகம் உள்ளது.உலகத்தை நோக்கி உற்றுப்பாருங்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லாதீர்கள்.

அத்தோடு இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி கடிதம் அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்புவதன் மூலம் ஒரு நாடு கிடைத்துவிடுமா? ஏற்கனவே 13 ஆம் திருத்தச் சட்டம் இங்கே நடைமுறையில் உள்ளது.

அதனை நாங்கள் பேசி அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரினால் அது சாத்தியப்படும். அதை விடுத்து நாங்கள் கடிதம் அனுப்புவதன் மூலம் அது நடைபெறாது. அத்தோடு நானும் வெளி விவகார அமைச்சரும் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி அவர்களுடன் தமிழ் பேசும் அனைத்து கட்சியினரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்ய உள்ளோம். அவ்வாறான சந்திப்புகள் மூலம் இங்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் பேசி அதற்குரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Recommended For You

About the Author: Editor Elukainews