நெடுந்தீவில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 1191.11 ஹெக்டேயர் நிலப்பகுதி விடுவிக்கப்படுகிறது.. |

யாழ்.நெடுந்தீவில் வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயமாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 1191.11 ஹெக்டேயர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு கடந்த 2015 ஜூன் 22 ஆம் திகதியன்று நெடுந்தீவில் 1728.11 ஹெக்டேயர் நிலப்பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வன,விலங்கு பாதுகாப்பு சரணாலயமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், மக்கள் வாழ்விடம், அபிவிருத்தி, பயிர் செய்கை போன்றவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்ட நிலப் பகுதியில் பெருமளவான பகுதியை விடுவிக்குமாறு 2021 பெப்ரவரி 14 ஆம் திகதி வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சின் வட மாகாண பணிப்பாளர் மா.பரமேஸ்வரன்

வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரட்னாயக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சரின் உத்தரவுக்கு அமைய அமைச்சின் செயலாளர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர வன,விலங்கு பாதுகாப்பு சரணாலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் 537 ஹெக்டேயர் தவிர

1191.11 ஹெக்டேயரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 2021 மார்ச் 8 ஆம் திகதி குறிப்பிட்டிருந்தார். இதன் பிரகாரம் மேற்படி பகுதியை விடுவிப்பதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்ட செயலகம் மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ வடக்கின் தென்னை முக்கோண வலயமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் முதலாவதாக நெடுந்தீவில் பாரிய தென்னை பயிற் செய்கை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளார்.

இதன் மூலம் 2000 மில்லியன் ரூபா வருமானத்தை நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெற்றுக் கொடுக்க முடியுமென்பதுடன் தொழில் வாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கு உதவுமென எதிர்பார்க்க முடியுமென பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சு நம்புவதாக குறிப்பிட்டுள்ளது. 

இந்த தென்னை செய்கை தனியார், பொது மக்கள் பங்குடமை தொழில் திட்டமாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பயிர்செய்கை மூலம் நெடுந்தீவில் பயன்பாடற்றிருக்கும் நிலப்பகுதி பயன்படுத்தப்படுவதன் மூலம் உல்லாச துறைக்கும் வலுசேர்க்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews